Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#T20WorldCup : பிலிப்ஸ் அதிரடி வீண்…. 20 ரன் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றி…. 2ஆவது இடத்திற்கு முன்னேற்றம்.!!

சூப்பர் 12 போட்டியில் இங்கிலாந்து அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

ஆஸ்திரேலியாவில் டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தற்போது சூப்பர் 12 சுற்று போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் குரூப்-1 பிரிவில் 6 அணிகள் மற்றும் குரூப் 2 பிரிவில் 6 அணிகள் என மொத்தம் 12 அணிகள் விளையாடி வருகின்றன. இதில் டாப் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்குள் நுழையும். இந்நிலையில் இன்று குரூப் 1 பிரிவிலுள்ள இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் பிரிஸ்பேன் மைதானத்தில் மோதியது.

இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி அந்த அணியின் துவக்க வீரர்களாக அலெக்ஸ் ஹேல்ஸ் மற்றும் ஜாஸ் பட்லர் இருவரும் களமிறங்கி நல்ல துவக்கம் கொடுத்தனர். முதல் 10 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 77 ரன்கள் குவித்தது இங்கிலாந்து அணி. ஹேல்ஸ்  அற்புதமாக ஆடி அரைசதம் அடித்தார். அதன் பின் சான்ட்னர் வீசியோ 11 வது ஓவரில் அலெக்ஸ் ஹேல்ஸ்  40 பந்துகளில் 7 பவுண்டரி, ஒரு சிக்ஸர் உட்பட 52 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அவுட் ஆனார்.

அதனைத் தொடர்ந்து வந்த மொயின் அலி 5 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். அதன்பின் லிவிங்ஸ்டன் – ஜாஸ் பட்லர் இணைந்து ஆடினர். பெர்குசன் வீசிய 13 வது ஓவரில் ஜாஸ் பட்லர் ஒரு கேட்ச் கொடுத்தார். லெக் சைட் திசையில் எல்லைக்கோடு அருகே வந்ததை மிட்செல் விட்டு விட்டார். இதனை பயன்படுத்திக் கொண்ட ஜாஸ் பட்லர் அதிரடியாக அரைசதம் அடித்தார். அதன்பின் லிவிங்ஸ்டன் 20 ரன்கள் எடுத்த நிலையில் பெர்குசன் வீசிய 18-வது ஓவரில் அவுட் ஆனார்.. தொடர்ந்து டிம் சவுதி வீசிய 19ஆவது ஓவரில் ஹாரி புரூக் 7 ரன்னில் அவுட் ஆனார்.

அதே ஓவரில் 47 பந்துகளில் (7 பவுண்டரி, 2 சிக்ஸர்) 73 ரன்கள் எடுத்திருந்த ஜாஸ் பட்லர் ரன் அவுட் ஆனார். பெர்குசன் வீசிய லாஸ்ட் ஓவரில் பென் ஸ்டோக்ஸ் 7 ரன்னில் அவுட் ஆனார். கடைசியில் சாம் கரன் 6*, டேவிட் மலான் 3* ரன்னிலும் அவுட் ஆகாமல் களத்தில் இருந்தனர். இறுதியில் இங்கிலாந்து அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 179 ரன்கள் குவித்தது. நியூசிலாந்து அணியில் லாக்கி பெர்குசன் 2 விக்கெட்டுகளும், டிம் சவுதி, சான்ட்னர், இஷ் சொதி ஆகியோர் தலா ஒரு விக்கெட் எடுத்தனர்..

இதையடுத்து நியூஸ்லாந்து அணியின் துவக்க வீரர்களாக களமிறங்கிய டெவான் கான்வே 3 மற்றும் பின் ஆலன் 16 என அடுத்தடுத்து அவுட் ஆகினர். நியூசிலாந்து அணி 4.6 ஓவரில் 28/2 என்று இருந்தது. அப்போது கேன் வில்லியம்சன் கிளென் பிலிப்ஸ் இருவரும் ஜோடி சேர்ந்தனர். இதில் கேன் வில்லியம்சன் பொறுமையாக தட்டி தட்டி ரன்களை எடுத்து வந்த நிலையில் கிளீன் பிலிப்ஸ் அதிரடியாக ஆடினார். நியூசிலாந்து அணி முதல் 10 ஓவரில் 66 ரன்களுக்கு 2 விக்கெட் இழந்து இருந்தது. இதையடுத்து தான் பிலிப்ஸ் பேட்டிங்கில் வேகத்தை காட்டினார்.

குறிப்பாக அடில் ரஷித் வீசிய 14 வது ஓவரில் 2 சிக்ஸர்களை தொடர்ச்சியாக பறக்க விட்டார் பிலிப்ஸ்.. அந்த ஓவரில் 17 ரன்கள் கிடைத்தது. அதன்பின் ஸ்டோக்ஸ் வீசிய 15 வது ஓவரில் வில்லியம்சன் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அவர் 40 பந்துகளில் 40 ரன்கள் மட்டுமே எடுத்து இக்கட்டான நேரத்தில் அவுட் ஆனதால் நியூசிலாந்து அணி மீது அழுத்தம் ஏற்பட்டது. கடைசி 5 ஓவரில் நியூசிலாந்து வெற்றிக்கு 57 ரன்கள் தேவைப்பட்டது. இதையடுத்து வந்த ஜிம்மி நீசம் 6, டேரில் மிட்செல் 3 என அடுத்தடுத்து அவுட்டானதால் ஆட்டம் மெல்ல மெல்ல இங்கிலாந்து பக்கம் திரும்பியது.

பின் கடைசி 3 ஓவரில் வெற்றிக்கு 49 ரன்கள் தேவைப்பட்டது. பிலிப்ஸ் களத்தில் இருக்கும் வரை நியூசிலாந்து அணி வெற்றி பெறும் என்ற நம்பிக்கை இருந்தது. ஆனால் சாம் கரன் வீசிய 18ஆவது ஓவரின் மூன்றாவது பந்தில் பிலிப்ஸ் நேராக தூக்கி அடித்து எல்லைக்கோடு அருகே ஜார்டன் வசம் பிடிபட்டார். இதனால் அப்படியே வெற்றி இங்கிலாந்து பக்கம் திரும்பியது. பிலிப்ஸ் 36 பந்துகளில் 4 பவுண்டரி, 3 சிக்சர் உட்பட 62 ரன்கள் எடுத்தார்.

 

கடைசி இரண்டு ஓவரில் 40 ரன்கள் தேவைப்பட்டது. கடைசியில் சான்ட்னர் மற்றும் இஷ் சோதி இருவரும் களத்தில் நின்றனர். வோக்ஸ் வீசிய 19 ஆவது ஓவரில் 14 ரன்கள் எடுத்த நியூசிலாந்து அணி, சாம் கரன் வீசிய கடைசி ஓவரில் 5 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் நியூசிலாந்து அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழந்து 159 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் 20 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தியது இங்கிலாந்து அணி. சான்ட்னர் 16* மற்றும் இஷ் சோதி 6* ரன்னுடன் அவுட் ஆகாமல் களத்தில் இருந்தனர்.  இங்கிலாந்து அணியில் அதிகபட்சமாக கிறிஸ் வோக்ஸ் மற்றும் சான் கரன் தலா 2 விக்கெட்டுகளும் மார்க் வுட், பென் ஸ்டோக்ஸ் தலா ஒரு விக்கெட் எடுத்தனர்.

இந்த வெற்றியின் மூலம் இங்கிலாந்து அணி 4 போட்டிகளில் 2 வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் 5 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திற்கு முன்னேறி உள்ளது. அதே சமயம் தோல்வியடைந்தாலும் நியூசிலாந்து அணி 4 போட்டிகளில் 2 வெற்றிகளுடன் நெட் ரன்ரேட் அதிகம் இருப்பதால் முதலிடத்தை தக்க வைத்துள்ளது..

Categories

Tech |