இந்திய அணியின் முகமது ஷமி மற்றும் தீபக் சாஹர் ஆகிய இருவரையும் அணியில் சேர்க்காமல் ஸ்டாண்ட் பை வீரர்களாக தேர்வு செய்துள்ளதற்கு ரசிகர்கள் தேர்வு குழுவை விமர்சனம் செய்து வருகின்றனர்..
இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருந்த டி20 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ நேற்று அறிவித்தது. நடந்து முடிந்த ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணி சூப்பர்4 சுற்றோடு வெளியேறிய நிலையில், இந்த டி20 உலக கோப்பை அணியில் பெரிய மாற்றம் ஏதும் இருக்குமா? என்று அனைவரும் கேள்வி எழுப்பி வந்த நிலையில் மாற்றம் ஏதும் இல்லாமல் கிட்டத்தட்ட அதே அணியை தான் பிசிசிஐ தேர்வு செய்துள்ளதாக கூறுகின்றனர்.. ஆசிய கோப்பை தொடரில் இடம் பிடித்து விளையாடிய பெரும்பான்மையான அணி வீரர்கள் தான் இதிலும் இடம் பிடித்துள்ளனர்.. மேலும் காயம் காரணமாக ஆசியக்கோப்பை தொடரில் பங்கேற்காமல் இருந்த ஜஸ்பிரிட் பும்ரா, ஹர்ஷல் பட்டேல் இடம் பிடித்துள்ளனர்.. இவர்கள் இருவரை தவிர்த்து பெரிய மாற்றம் எதுவும் அணியில் நிகழவில்லை.
இந்நிலையில் டி20 உலகக்கோப்பைக்கான அணி அறிவிக்கப்பட்டதிலிருந்து சமூக வலைதளங்களில் ரசிகர்கள் பல்வேறு கேள்விகளை முன் வைத்து வருகின்றனர். அதில் குறிப்பாக இந்திய அணியின் அனுபவ வீரரான முகமது ஷமி மற்றும் டி20 பவர் பிளே விக்கெட் டேக்கர் ஆக இருக்கக்கூடிய தீபக் சாஹர் ஆகிய இருவரையும் அணியில் சேர்க்காமல் ஸ்டாண்ட் பை வீரர்களாக தேர்வு செய்துள்ளதற்கு ரசிகர்கள் தேர்வு குழுவை விமர்சனம் செய்து வருகின்றனர்..
ஏனென்றால் அனுபவம் வாய்ந்த வீரராக கருதப்படும் முகமது ஷமி மிக சிறப்பாக பந்து வீசி தொடக்கத்திலேயே விக்கெட் எடுக்கும் திறமை வாய்ந்தவர். சமீபத்தில் இந்தியாவில் நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் கூட குஜராத் அணி சாம்பியன் பட்டம் வெல்வதற்கு அந்த அணியின் முக்கிய பந்துவீச்சாளராக திகழ்ந்தவர் முகமதுஷமி தான்.
அதேபோல டி20 கிரிக்கெட்டில் பவர் பிளே ஓவர்களில் பந்தினை இருபுறமும் ஸ்விங் செய்து விக்கெட் எடுக்கக்கூடிய தீபக் சாஹர் முக்கிய வீரராக இருந்து வருகிறார். இவரையும் அணியில் ஸ்டாண்ட் பை வீரர்களாக வைத்துவிட்டு முதன்மை அணியில் இவரை சேர்க்காததால் ரசிகர்கள் பிசிசிஐ மீது கோபத்தில் கேள்விகளை முன்வைத்து வருகின்றனர்.. அதேபோல பவுலர்களை தவிர்த்து சஞ்சு சாம்சனை பேட்டிங்கில் சேர்க்காதது குறித்தும் அவர்கள் கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது.. டி20 கிரிக்கெட்டில் எப்போது விக்கெட் சரிந்தாலும் தனது வழக்கமான அதிரடி ஆட்டத்தை கொண்டு ரன்களை உயர்த்தும் திறமை வாய்ந்த சஞ்சு சாம்சனுக்கு தொடர்ந்து வாய்ப்பு மறுக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது..
ஐசிசி டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி:
ரோஹித் சர்மா (கேப்டன்), கேஎல் ராகுல் (துணை கேப்டன்), விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா, ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, ஆர். அஸ்வின், யுஸ்வேந்திர சாஹல், அக்சர் படேல், ஜஸ்பிரித் பும்ரா, புவனேஷ்வர் குமார், ஹர்ஷல் படேல், அர்ஷ்தீப் சிங்.
காத்திருப்பு வீரர்கள் :
முகமது ஷமி, ஷ்ரேயாஸ் ஐயர், ரவி பிஷ்னோய், தீபக் சாஹர்.