டி20 உலகக்கோப்பை சூப்பர் 12 சுற்றில் ஆஸ்திரேலியா அணி 42 ரன்கள் வித்தியாசத்தில் அயர்லாந்து அணியை வீழ்த்தியது ..
டி20 உலகக் கோப்பை சூப்பர் 12 போட்டியில் இன்று ஆஸ்திரேலியா மற்றும் அயர்லாந்து அணிகள் மோதியது. பிரிஸ்பேன் மைதானத்தில் இந்திய நேரப்படி 12:30 மணி முதல் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற அயர்லாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி ஆஸ்திரேலியா அணியின் துவக்க வீரர்களாக டேவிட் வார்னர் மற்றும் ஆரோன் பிஞ்ச் இருவரும் களம் இறங்கினர்..
இதில் வார்னர் 3 ரன்னில் மெக்கர்த்தி வீசிய 3ஆவது ஓவரில் அவுட் ஆனார். இதையடுத்து மிட்செல் மார்ஷ் உடன் ஆரோன் பிஞ்ச் கைகோர்த்து இருவரும் சிறப்பான ஆடி நல்ல துவக்கம் கொடுத்தனர். இதையடுத்து மார்ஷ் 28 ரன்னில் அவுட் ஆனார். தொடர்ந்து வந்த மேக்ஸ்வெல் 13 ரன்களில் அவுட் ஆனார். அப்போது ஆஸ்திரேலியா அணியின் ஸ்கோர் 10.5 ஓவரில் 84/3 என இருந்தது. இதையடுத்து ஆரோன் பிஞ்ச் மற்றும் மார்கஸ் ஸ்டோய்னிஸ் இருவரும் ஜோடி சேர்ந்தனர்..
இவர்கள் இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த நிலையில், பிஞ்ச் அரை சதம் விளாசினார். அதன்பின் 44 பந்துகளில் 5 பவுண்டரி, 3 சிக்ஸர் உட்பட 63 ரன்கள் எடுத்திருந்த பிஞ்ச் 17 வது ஓவரில் அவுட் ஆனார்.. அதனைத் தொடர்ந்து அதிரடியாக ஆடிவந்த ஸ்டோய்னிஸ் 19 ஆவது ஓவரில் 25 பந்துகளில் 35 ரன்கள் எடுத்த நிலையில் பெவிலியன் திரும்பினார்.
இதையடுத்து கடைசியில் டிம் டேவிட் 15 ரன்கள் மற்றும் மேத்யூ வேட் 7 ரன்கள் எடுக்க, இறுதியில் 20 ஓவர் முடிவில் ஆஸ்திரேலியா அணி 5 விக்கெட் இழந்து 179 ரன்கள் குவித்தது. கடைசி ஓவரில் மட்டும் ஆஸ்திரேலியாவுக்கு 17 ரன்கள் கிடைத்தது. அயர்லாந்து அணியில் அதிகபட்சமாக மெக்கர்தி 3 விக்கெட்டுகளும், லிட்டில் 2 விக்கெட்டுகளும் எடுத்தனர்.
இதையடுத்து 180 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் துவக்க வீரர்களாக பால் ஸ்டிர்லிங் மற்றும் பால்பிர்னி ஆகிய இருவரும் களமிறங்கினர். ஹேசல்வுட் வீசிய முதல் ஓவரில் பால்பிர்னி ஒரு சிக்ஸ் அடிக்க, மொத்தம் அந்த ஓவரில் 7 ரன்கள் கிடைத்தது. அதன்பின் ஸ்டிர்லிங் கம்மின்ஸ் வீசிய 2ஆவது ஓவரில், இரண்டாவது மூன்றாவது பந்தில் பவுண்டரி, சிக்சர் என அடித்து அதிரடியை தொடங்கினார். ஆனால் அதே ஓவரில் பால்பிர்னி 6 ரன்னில் அவுட் ஆனார்.
அதனைத் தொடர்ந்து மேக்ஸ்வெல் தனது 3ஆவது ஓவரில் ஸ்டெர்லிங் (11) டெக்டர் (6) என இருவரையும் அவுட் ஆக்கி அசத்தினார். பின் 4ஆவது ஓவரில் கேம்பர்(0) மற்றும் டாக்ரெல்(0) என இருவரையும் ஸ்டார்க் கிளீன் போல்ட் ஆக்கினார். அதன்பின் வந்த வீரர்கள் டெலானி (14), அடேர் (11), ஹேண்ட் (6), மெக்கர்தி (3) என அனைவரும் சொற்ப ரன்களில் அடுத்தடுத்து அவுட் ஆகி வெளியேறினர். இருப்பினும் மறுமுனையில் லோர்கன் டக்கர் மட்டுமே தனி ஒரு ஆளாக அடித்துக் கொண்டிருந்தார். கடைசியில் மேக்ஸ்வெல் வீசிய 19ஆவது ஓவரில் லிட்டில் ரன் அவுட் ஆனார்.
இறுதியில் 18.1 ஓவரில் 137 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனால் ஆஸ்திரேலியா அணி 42 ரன்கள் வித்தியாசத்தில் அயர்லாந்து அணியை வீழ்த்தியது. அயர்லாந்து அணியில் அதிகபட்சமாக லோர்கன் டக்கர் 48 பந்துகளில் (9 பவுண்டரி, 1 சிக்ஸர்) 71* ரன்கள் எடுத்து அவுட் ஆகாமல் இருந்தார். ஆஸ்திரேலியா அணியில் கிளென் மேக்ஸ்வெல், மிட்செல் ஸ்டார்க், ஆடம் சாம்பா மற்றும் கம்மின்ஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும், ஸ்டோய்னிஸ் ஒரு விக்கெட்டும் எடுத்தனர்..
இந்த வெற்றியின் மூலம் 3ஆவது இடத்திலிருந்த ஆஸ்திரேலியா அணி புள்ளி பட்டியலில் 5 புள்ளிகளுடன் 2ஆவது இடத்துக்கு முன்னேறி உள்ளது. நியூசிலாந்து அணி அதிக நெட் ரன்ரேட்டுடன் புள்ளி பட்டியலில் 5 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருக்கிறது. ஆஸ்திரேலிய அணி தனது கடைசி போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியை நவம்பர் 4ஆம் தேதி எதிர்கொள்கிறது..
Australia complete a fine win to keep semi-final hopes alive 💪#T20WorldCup | #AUSvIRE | 📝: https://t.co/CW4eQlDZGZ pic.twitter.com/WdUP4gLfZE
— ICC (@ICC) October 31, 2022