பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
8ஆவது டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் கடந்த 16ஆம் தேதி தொடங்கிய நிலையில் நவம்பர் 13ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் முதல் கட்டமாக தகுதிச்சுற்று போட்டிகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில், தற்போது சூப்பர் 12 போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்திய அணி இன்று பரம எதிரியாக கருதப்படும் பாகிஸ்தான அணியை மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் இந்திய நேரப்படி மதியம் 1:30 மணிக்கு எதிர்கொள்கிறது.
பாபர் அசாம் தலைமையில் பாகிஸ்தான் படையும், ரோஹித் சர்மா தலைமையில் இந்திய படையும் இன்று மோதும் போட்டி உலக கிரிக்கெட் ரசிகர்கள் இடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. இதனால் பாகிஸ்தான் அணி பேட்டிங் ஆடி வருகின்றது.
இதையடுத்து பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரராக முகம்மது ரிஸ்வான் மற்றும் பாபர் அசாம் களமிறங்கினர். 2ஆவது ஓவரை வீசிய அர்ஷ்தீப் சிங்கின் முதல் பந்தில் பாகிஸ்தான் வீரர் பாபர் அசாம் 0வில் ஆட்டமிழந்தார். இதனை இந்திய ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.