2011க்குப் பிறகு ஆஸ்திரேலிய மண்ணில் நியூசிலாந்து தனது முதல் சர்வதேசப் போட்டியில் வெற்றி பெற்று அசத்தியுள்ளது..
டி20 உலகக்கோப்பை சூப்பர் 12 சுற்றின் முதல் போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகள் இந்திய நேரப்படி மதியம் 12:30 மணிக்கு மோதியது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பந்து வீச முடிவு செய்தது அதன்படி நியூசிலாந்தின் தொடக்க வீரர்களாக ஃபின் ஆலன் மற்றும் டெவோன் கான்வே இருவரும் களறங்கினர். இதில் ஆலன் முதல் ஓவரிலிருந்து அதிரடியில் இறங்கினார். பவர்பிளே முடிவதற்குள் நியூசிலாந்து அணி 50 ரன்கள் கடந்தது. அரை சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஆலன் 16 பந்துகளில் 5 பவுண்டரி, 3 சிக்ஸர் உட்பட 42 ரன்கள் எடுத்த நிலையில். ஆட்டம் இழந்தார்.. 4.1 ஓவரில் 56 க்கு முதல் விக்கெட் விழுந்தது.
இதன்பின் கேன் வில்லியம்சன் கான்வேயுடன் இணைந்தார். அதன் பின் கான்வே அதிரடியில் இறங்க வில்லியம்சன் அவருக்கு நல்ல கம்பெனி கொடுக்க ரன் ரேட் 10ல் சென்றது. கான்வேயும் அரைசதம் கடந்தார். அதன்பின் ஜாம்பா வீசிய 12.6 வது ஓவரில் வில்லியம்சன் எல்.பி.டபிள்யூ ஆகி வெளியேறினார். அதன் பின் வந்த பிலிப்ஸ் 12 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். இதையடுத்து கன்வேயும், ஜிம்மி நீஷமும் ஜோடி சேர்ந்து கடைசியில் அதிரடியாக ஆடினர்.
இறுதியில் ஜோஷ் ஹேசில்வுட் வீசிய கடைசி ஓவரில் நியூசிலாந்து அணி 14 ரன்கள் எடுத்தது. அந்த ஓவரின் கடைசி பந்தில் சிக்ஸருடன் முடித்தார் நீசம். இதனால் நியூசிலாந்து அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழந்து 200 ரன்களை குவித்துள்ளது.. கான்வே 58 பந்துகளில் 7 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் உட்பட 92 ரன்களுடனும், ஜிம்மி நீசம் 13 பந்துகளில் 26 ரன்களும் எடுத்த நிலையில், அவுட் ஆகாமல் களத்தில் இருந்தனர். ஆஸ்திரேலியா அணியில் அதிகபட்சமாக ஹேசில்வுட் 2 விக்கெட் எடுத்தார்.
இதையடுத்து இமாலய இலக்கை நோக்கி ஆஸ்திரேலியா அணியின் தொடக்க வீரர்களாக களமிறங்கிய டேவிட் வார்னர்( 5) டீம் சவுதி வீசிய இரண்டாவது ஓவரின் முதல் பந்தில் போல்டாகி அதிர்ச்சி கொடுத்தார். அதன்பின் நான்காவது ஓவரில் மற்றொரு துவக்கவீரர் கேப்டன் ஆரோன் பிஞ்ச் 13 மிச்சல் சாண்ட்னர் பந்துவீச்சில் வில்லியம்சனிடம் சிக்கினார்.
அதன்பின் மிட்செல் மார்ஸ் 16, மார்க்கஸ் ஸ்டாய்னிஸ் 7, டிம் டேவிட் 11, என வருவதும் போவதுமாக ஆஸ்திரேலிய வீரர்கள் அவுட் ஆகினர். அதிகபட்சமாக மேக்ஸ்வெல் 28 ரன்கள் எடுத்த நிலையில் அவரும் அவுட் ஆனார். மேலும் மேத்யூ வேட் 2, ஸ்டார்க் 4, கம்மின்ஸ் 21, ஜாம்பா 0 என அனைவரும் அவுட் ஆக 17. 1 ஓவரில் ஆஸ்திரேலியா அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 111-க்கு ஆல் அவுட் ஆனது. இதனால் நியூசிலாந்து அணி 89 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சூப்பர் 12ல் முதல் வெற்றியை பதிவு செய்ய உள்ளது.
நியூசிலாந்து அணியில் அதிகபட்சமாக மிட்செல் சான்ட்னர் மற்றும் டிம் சவுதி ஆகியோர் 3 விக்கெட்டுகளும், போல்ட் 2 விக்கெட்டுகளும் எடுத்தனர். அதிரடியாக ஆடிய நியூசிலாந்து வீரர் கான்வே ஆட்டநாயகன் விருது பெற்றார். டி20 உலகக் கோப்பையில் ரன்களின் அடிப்படையில் ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய தோல்வி இதுவாகும்.
இந்த வெற்றியின் மூலம் 2011க்குப் பிறகு ஆஸ்திரேலிய மண்ணில் நியூசிலாந்து தனது முதல் ஆடவர் சர்வதேசப் போட்டியில் வெற்றி பெற்றது. அதாவது, 2012 ஆம் ஆண்டு முதல் ஆஸ்திரேலியாவில் நியூசிலாந்து அணி அனைத்து பார்மட்டிகளிலும் விளையாடிய 16 போட்டிகளில் முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது. இந்த போட்டிக்கு முன் விளையாடிய 15 போட்டிகளில் 1 போட்டி டிரா ஆக 14 போட்டிகளில் நியூசிலாந்து அணி தோல்வி அடைந்திருந்தது தற்போது 11 ஆண்டுகளுக்குப் பிறகு ஆஸ்திரேலியாவில் நியூசிலாந்து முதல் வெற்றியை பதிவு செய்தது. இதனால் நியூசிலாந்து கிரிக்கெட் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். கடந்த 2021 டி20 உலகக்கோப்பையில் இறுதிப்போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி ஆஸ்திரேலியா கோப்பையை வென்றது குறிப்பிடத்தக்கது.
New Zealand win their first men's international game on Australian soil since 2011 🔥#T20WorldCup | #AUSvNZ | 📝 Scorecard: https://t.co/1mYxKgn4aP pic.twitter.com/D784MzZbam
— T20 World Cup (@T20WorldCup) October 22, 2022