குருபூரம் நிகழ்வின்போது தான் சந்தித்த மோசமான அனுபவத்தையும், அதிலிருந்து தைரியமாக தன்னை தற்காத்துக்கொண்ட விதம் பற்றியும் விவரித்தார் நடிகை டாப்ஸி. பாலிவுட் நடிகை கரீனா கபூர் ‘வாட் உமென் வான்ட்’ என்ற நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனை தொகுத்து வழங்கிவருகிறார். 104.8 இஸ்க் எஃப்-இல் ஒளிபரப்பாகவுள்ள இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக நடிகை டாப்ஸி கலந்துகொண்டார்.
அப்போது அவர் தன்னை தவறான நோக்கத்தில் தொட முயற்சித்த அடையாளம் தெரியாத நபருக்கு சரியான பாடம் புகட்டிய சம்பவம் குறித்து நினைவு கூர்ந்தார். இதுகுறித்து டாப்ஸி கூறுகையில், ஆண்டுதோறும் குருபூரம் நிகழ்வின்போது எங்கள் பகுதியிலிருக்கும் சீக்கிய கோயிலுக்கு செல்வேன். அங்கு சிறு ஸ்டால்கள் அமைக்கப்பட்டு உணவுகள் வழங்கப்படும். அந்தப் பகுதி முழுவதும் கோயிலுக்கு வந்த மக்களின் கூட்டம் நிரம்பியிருப்பதுடன், தள்ளுமுள்ளு ஏற்படும். இந்த சம்பவத்துக்கு முன்னரே பல மோசமான அனுபவங்கள் ஏற்பட்டிருக்கிறது.
ஆனால் இந்த முறையும் இதுபோன்றும் நடக்கும் என உள்ளுணர்வு ஏற்பட்டது. எனவே அவற்றிலிருந்து தற்காத்துக்கொள்ள மனரீதியாக தயாரானேன். அடையாளம் தெரியாத நபர் பின்னாலிருந்து என்னை தவறான நோக்கத்தில் தொட முயற்சித்தார். இதை அறிந்துகொண்டு உடனடியாக அவரது கை விரல்களை பிடித்து முறுக்கினேன். வலி தாங்க முடியாமல் அங்கிருந்து அந்த நபர் வேகமாக ஓடிவிட்டார் என்றார்.
டாப்ஸி தற்போது கிரிக்கெட் வீரர் மிதாலி ராஜ் வாழ்க்கை வரலாற்று படமான சபாஷ் மித்து, தப்பட் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.