கொரோனா சிகிச்சைக்கான மாத்திரை வருகின்ற ஆகஸ்ட் முதல் விற்பனைக்கு வர இருப்பதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும் அதனுடைய பாதிப்பு குறைந்த பாடில்லை. பாதிப்பை கட்டுப்படுத்துவதற்கு கடந்த மார்ச் 23-ஆம் தேதி முதல் தற்போது வரை தொடர்ந்து ஆறாவது கட்ட நிலையில் ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது.ஒருபுறம் ஊரடங்கு அமலில் இருந்தாலும், இதனை ஒரேடியாக சமாளிப்பதற்கு தடுப்பு மருந்து கண்டு பிடிப்பதுதான் ஒரே வழி என்பதால், உலக நாடுகள் தடுப்பு மருந்தை கண்டு பிடிப்பதில் மும்முரம் காட்டி வருகின்றனர்.
இந்தியாவிலும் அதற்கான பரிசோதனைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதற்கு முன்பாக ஐ சி எம் ஆர் இந்தியாவில் வருகின்ற ஆகஸ்ட் மாதம் முதல் மனிதர்களிடையே கொரோனாவுக்கான தடுப்பூசி மருந்தை செலுத்தும் பணி நடைபெற இருப்பதாக தெரிவித்தது. ஆனால் தற்போது இந்தியாவின் பன்னாட்டு மருந்து தயாரிப்பு நிறுவனமான சிப்லா நிறுவனம் கொரோனா சிகிச்சைக்கு பேபிபிராவிர் என்ற மாத்திரைகளை தயாரிக்க உரிமம் வாங்கியுள்ளது.
இந்தியாவில் சிலபென்சா என்ற பெயரில் ரூபாய் 68 என்கின்ற விலையில் இந்த மாத்திரை வருகின்ற ஆகஸ்ட் மாதம் முதல் விற்பனைக்கு வருகிறது. இதற்கு இந்திய மருத்துவ கவுன்சிலும் ஒப்புதல் அளித்துள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்த பேபி பிராவிர் மாத்திரைகள் சில மாதங்களுக்கு முன்பே கொரோனா சிகிச்சைக்காக பரிந்துரைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.எது எப்படி இருந்தாலும் முறையான அறிவிப்பு வரும் வரை காத்திருந்து சுகாதாரத்துறையில் அறிவுரைப்படி மக்கள் நடந்து கொண்டால் நன்றாக இருக்கும்.