உத்தரபிரதேச இளம்பெண் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து திமுக மகளிரணி ஆளுநர் மாளிகை நோக்கி பேரணி நடத்துகின்றது.
உத்தரபிரதேச மாநிலத்தில் ஹத்ராஸ் பகுதியில் இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து அடுத்தடுத்து நடக்கும் நிகழ்வுகள் ஜனநாயகத்தின் மீதான தாக்குதலாக அமைந்திருக்கின்றது. காங்கிரஸ் முக்கிய தலைவர் ராகுல் காந்தி அவர்களும், பிரியங்கா காந்தி அவர்களும் அந்த பெண்ணின் குடும்பத்துக்கு ஆறுதல் சொல்ல சென்றபோது தடுத்து நிறுத்தப்பட்டது, காவல்துறையால் தாக்கப்பட்டிருக்கிறார்கள்.
பெண்ணினத்தின் மீதான இந்த அடக்குமுறை ஆதிக்கத்தை எதிர்த்து திராவிட முன்னேற்ற கழக மகளிரணி சார்பில் இன்று மாலை ஆளுநர் மாளிகை நோக்கி பேரணி நடத்துவார்கள் என கழகத் தலைவர் அறிவித்திருக்கிறார். தலைவர் அறிவிப்பினை செயல்படுத்தும் வகையில் தமிழகத்தின் கோரிக்கையை மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டுசெல்லும் விதமாக தமிழக ஆளுநர் மாளிகையை நோக்கிய இந்த கண்டனப் பேரணியில் கழக மகளிர் அணி தொண்டர் அணி திரளாக பங்கேற்குமாறு அழைப்பு விடுக்கின்றேன்.
கையில் அனைவரும் மெழுகுவர்த்தி ஒளி ஏந்தி, அமைதியான முறையில் நமது கண்டனத்தை அழுத்தமாக தெரிவிக்க வேண்டும். அதே நேரத்தில் தொற்று பரவலுக்கு நாம் எந்தவகையிலும் காரணமாகி விடக்கூடாது என்ற பொது நலனில் அக்கறை யின் அடிப்படையில் முகக் கவசங்கள் அணிந்து, சமூக இடைவெளி யோடு இந்த பேரணியில் பங்கு ஏற்குமாறு கேட்டுக் கொள்கின்றேன் என்று மக்களவை உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார்.