பாகிஸ்தான் பயங்கரவாதி ஹபீஸ் சயீதின் மகன் ஹபீஸ் டல்ஹாவை தீவிரவாதியாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
பாகிஸ்தான் தீவிரவாதிகள் 10 பேர் கடல் மார்க்கமாக புகுந்து மும்பையில் 2008-ம் ஆண்டு நவம்பர் 26-ந்தேதி 10-க்கும் மேற்பட்ட இடங்களில் குண்டுகளை வெடித்தும், துப்பாக்கிகளால் சுட்டும் தாக்குதல்கள் நடத்தி 150-க்கும் மேற்பட்டோரை கொடூரமாக கொன்று குவித்தனர். அந்த 9 தீவிரவாதிகளும் நமது பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். அஜ்மல் கசாப் என்ற இளம் தீவிரவாதியை மட்டும் உயிருடன் பிடித்து தண்டனையாக தூக்கில் இடப்பட்டார்.
இத்தாக்குதல்களை லஷ்கர் இ தொய்பா மற்றும் ஜமாத் உத் தாவா தீவிரவாத இயக்கங்களை சேர்ந்த ஹபீஸ் சயீத் பாகிஸ்தானில் இருந்தவாறு நடத்தினார். பாகிஸ்தானில் பல்வேறு தீவிரவாத வழக்குகளில் சிக்கி தற்போது இவர் தண்டிக்கப்பட்டுள்ளார். அது மட்டுமின்றி இவரது மகன் ஹபீஸ் டல்ஹா சயீத் பாகிஸ்தானில் லாகூரில் இருக்கிறார். இதனை தொடர்ந்து லஷ்கர் இ தொய்பா அமைப்பின் மூத்த மற்றும் அதன் மத அமைப்பின் தலைவராக உள்ள இவரை திவிரவாதியாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
இது தொடர்பாக முறையான அறிவிப்பை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதில், “ஹபீஸ் டல்ஹா சயீத், பாகிஸ்தான் முழுவதும் உள்ள லஷ்கர் இ தொய்பா தீவிரவாத அமைப்பின் மையங்களுக்கு சென்று இந்தியா, இஸ்ரேல், அமெரிக்கா மற்றும் பிற மேற்கத்திய நாடுகளின் நலன்களுக்கு எதிராக பிரசாரம் செய்து வருகிறார். இவர் பயங்கரவாதத்தில் ஈடுபட்டுள்ளார் என மத்திய அரசு நம்புகிறது. எனவே அவர் சட்டப்படி தீவிரவாதி என அறிவிக்கப்பட வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது.
சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தின் பிரிவு 35, உட்பிரிவு (1) உட்பிரிவு (ஏ) யின் ஷரத்து, ஒருவர் திவிரவததில் ஈடுபட்டதாக நம்பினால் மத்திய அரசுக்கு அவரை நான்காவது அட்டவணையில் தீவிரவாதி என்று அறிவிக்க அதிகாரம் அளிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.