ஆப்கானிஸ்தான் நாட்டில் பெண்கள் பொழுதுபோக்கு பூங்காவிற்கு செல்லக்கூடாது என்று தலிபான்கள் தடை விதித்துள்ளனர்.
ஆப்கானிஸ்தான் நாட்டை தலிப்பான்கள் கைப்பற்றியவுடன் அங்கு அதிரடியாக பல கட்டுப்பாடுகளை அறிவித்தனர். குறிப்பாக பெண்களுக்கு கடுமையாக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. அதன்படி ஆறாம் வகுப்பிற்கு மேல் பெண்கள் கல்வி கற்க முடியாது, விமானங்களில் ஆண்களின் துணை இல்லாமல் பயணிக்க முடியாது என்பது போன்ற பல கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பொழுதுபோக்கு பூங்காக்களுக்கும் இனிமேல் பெண்கள் செல்லக்கூடாது என்று தலிபான்கள் தடை அறிவித்திருக்கிறார்கள். இதற்கு முன்பு ஆண்கள் மற்றும் பெண்கள் இருபாலரும் ஒரே நாட்களில் பொழுதுபோக்கு பூங்காக்களுக்கு செல்லக்கூடாது என்று தடை விதித்திருந்தனர்.
அதன்படி, ஆண்களுக்கு என்று சில நாட்களும், பெண்கள் செல்வதற்கு என்று சில நாட்களும் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது பெண்கள் பூங்காவிற்கு செல்ல மொத்தமாக தடை விதிக்கப்பட்டு இருக்கிறது. இது மட்டுமல்லாமல் உடற்பயிற்சி கூடங்களுக்கும் பெண்கள் செல்லக்கூடாது என்று தடை விதித்திருக்கிறார்கள். மேலும் இந்த தடைகள் உடனடியாக நடைமுறைக்கு வரும் என்றும் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.