ஆப்கானிஸ்தானில், தலிபான்கள் இடைக்கால ஆட்சி அமையும் என்று அறிவித்திருப்பது சட்டவிரோதமானது என கிளர்ச்சிப் படையின் தலைவரான அகமது மசூத் கூறியிருக்கிறார்.
ஆப்கானிஸ்தானை கைப்பற்றிய தலிபான்கள் அங்கு இடைக்கால ஆட்சி அமைக்கப் போவதாக தெரிவித்துள்ளார்கள். மேலும் இடைக்கால மந்திரி சபை மற்றும் பிரதமரையும் அறிவித்துவிட்டார்கள். எனவே, முன்பிருந்த ஆட்சியில் தங்களை எதிர்த்த அரசு அதிகாரிகளையும், பத்திரிகையாளர்களையும் சிறை பிடிக்கிறார்கள் அல்லது கொலை செய்கிறார்கள்.
இந்நிலையில், ஆப்கானிஸ்தானின் தேசிய கிளர்ச்சிப் படை தலைவரான அகமது மசூத், நாட்டில் இடைக்கால ஆட்சி அமையப்போவதாக தலீபான்கள் தெரிவித்திருப்பது சட்டவிரோதமானது என்று கூறியுள்ளார். மேலும் இது உலகின் ஸ்திரத்தன்மைக்கும், பாதுகாப்பிற்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என்று கூறியிருக்கிறார்.
மேலும், ஷாங்காயின் அமைப்பு, ஐக்கிய நாடுகள் சபை (UN), இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை (UNHRC), பிராந்திய ஒத்துழைப்புக்கான தெற்காசிய சங்கம் (SARC) மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் (EU) ஆகிய நிறுவனங்களை தலீபான்களுக்கு ஆதரவளிக்காதீர்கள் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.