ஆப்கானிஸ்தானில், தலிபான்களை எதிர்த்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்கள் மீது துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
தலிபான்கள், ஆப்கானிஸ்தான் நாட்டை கைப்பற்றியதோடு அங்கு இடைக்கால ஆட்சி அமைத்திருக்கிறார்கள். இதில் பெண்கள் இடம் பெறவில்லை. எனவே, இந்த இடைக்கால ஆட்சியை எதிர்த்து தலைநகர் காபூலில் கடந்த புதன்கிழமையிலிருந்து பெண்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறார்கள்.
அதில், “ஆப்கானிஸ்தான் பெண்கள் வாழ்க” என்று முழக்கமிட்டனர்.மேலும், “எந்த ஆட்சியும் பெண்களின் இருப்பை மறுக்க முடியாது”, “மீண்டும் மீண்டும் போராடுவேன்” என்று எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தி போராடியுள்ளனர். இதனால், தலிபான்கள் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் மீது தாக்குதல் நடத்தினார்கள்.
மேலும் தலீபான்கள், சிறை வைத்திருந்த பத்திரிகையாளர்களுக்கு கடுமையான காயங்கள் ஏற்பட்டிருந்த புகைப்படங்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் போராட்டத்தை கலைத்துவிட்டு மக்கள், அவரவர் குடியிருப்புகளில் இருக்குமாறு தலிபான்கள் அறிவித்தனர்.
எனினும், தலிபான்கள் எச்சரிக்கையை பொருட்படுத்தாமல் மக்கள் நேற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் தலிபான்கள் போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தி கூட்டத்தைக் கலைத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.