தலிபான்களின் முதன்மை தலைவர்களில் ஒருவராக இருக்கும் அப்துல் கஹார் பால்கி உலக நாடுகளுடன், தலீபான்கள் நட்புறவை ஏற்படுத்த விரும்புவதாக கூறியிருக்கிறார்.
ஆப்கானிஸ்தானை தலிபான்கள் இரண்டாம் தடவையாக கைப்பற்றியிருப்பதால், அவர்களின் ஆட்சிக்கு அஞ்சி மக்கள் அங்கிருந்து வெளியேறி வருகிறார்கள். எனவே, பிரிட்டன், அமெரிக்கா மற்றும் கனடா போன்ற நாடுகள் ஆப்கானிஸ்தானில் இருக்கும் தங்கள் மக்களுடன் சேர்த்து அந்நாட்டு மக்களையும் மீட்டு வருகிறது. இந்நிலையில் தலிபான்களின் முதன்மை தலைவர்களில் ஒருவராக இருக்கும் அப்துல் கஹார் பால்கி, முதல் தடவையாக ஒரு ஐரோப்பிய பத்திரிக்கைக்கு எழுத்துபூர்வமாக ஒரு நேர்காணல் நடத்தியிருக்கிறார்.
அதில், அவர் குறிப்பிட்டிருப்பதாவது, அமெரிக்க திரைப்படங்களில் தற்போது வரை காட்டப்பட்டிருப்பதை நம்பி தான் மக்கள் நாட்டை விட்டு வெளியேறுகிறார்கள். தலிபான்கள் எப்போதும் தங்கள் நாட்டவர்களை மிரட்டியதில்லை. தங்கள் மீதுள்ள பயம் என்பது மொத்தமாக ஆதாரம் இல்லாதது என்று கூறியிருக்கிறார். மேலும், எங்கள் நாட்டு மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது தான் தலிபான்களின் கடமை என்று கூறியிருக்கிறார்.
மேலும், மரணதண்டனைகள், சட்டத்திற்கு மாறாக கொலைகள் செய்யப்படுகிறது என்று பத்திரிக்கைகளில் வெளிவரும் அனைத்தும் வதந்தி. பிற நாட்டவர்களுடன் இணைந்து பணியாற்றிய ஆப்கானிஸ்தான் நாட்டு மக்களின் பட்டியல் தயாரிக்கப்படுகிறது என்று கூறப்படுவது உண்மை அல்ல என்று கூறியிருக்கிறார்.
பெண்களை பயமுறுத்துவது கூட ஆதாரம் இல்லாதது தான். இஸ்லாம் மதத்தின் சட்டப்படி பெண்களை பாதுகாப்பதற்கு தான் தலிபான்கள் முயற்சி செய்வதாக குறிப்பிட்டிருக்கிறார். மேலும், சொந்த நாட்டின் செழிப்பு மற்றும் அமைதியை ஏற்படுத்துவது தான் தங்களின் நோக்கம். இதற்கு ஷரியா சட்டம் அவசியப்படுகிறது என்று கூறியிருக்கிறார். இந்த ஷரியா சட்டம் தண்டனைக்காக மட்டும் தான் பயன்படுத்தப்படுகிறது என்று கூறப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. சுவிட்சர்லாந்து உட்பட உலக நாடுகளுடன் நட்புறவை ஏற்படுத்திக்கொள்ள தான் தலிபான் அமைப்பு விரும்புகிறது என்று குறிப்பிட்டிருக்கிறார்.