இளம் தாயான பெண் ஒருவர் தலீபான்களிடம் அனுபவித்த கொடுமைகளை கூறியதோடு, ஆப்கானிஸ்தான் பெண்களின் வருங்காலம் குறித்து வருத்தம் தெரிவித்திருக்கிறார்.
டெல்லியில் வாழ்ந்து வரும் Khatera என்ற 33 வயது பெண், தலிபான் தீவிரவாதிகளை எதிர்க்கும் பெண்களின் சடலங்கள் நாய்களுக்கு இரையாக்கப்படும் கொடுமைகள் இனிமேல் நடக்கும் என்று கூறியிருக்கிறார். தலிபான் தீவிரவாதிகளை எதிர்த்து குரல் கொடுத்ததால்தான், தன் இரு கண்களும் பறிபோனதாக கூறியிருக்கிறார்.
ஆப்கானிஸ்தான் நாட்டின், காஸ்னி பிராந்தியத்தில் வாழ்ந்த Khatera, கடந்த வருடம் தலீபான் தீவிரவாதிகளின் கடுமையான தாக்குதலுக்கு ஆளானார். இவரின் மார்பு பகுதியிலும், வயிற்று பகுதியில் 8 தடவை சுட்டுள்ளனர். எனினும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார். ஒரு நாள் பணி முடித்து அலுவலகத்திலிருந்து திரும்பும் போது தலிபான் தீவிரவாதிகள் மூவர் தன்னை தடுத்து நிறுத்தி, அடையாள அட்டையை சோதித்து பார்த்துவிட்டு, சுட்டதாக கூறியுள்ளார்.
மேலும் தன் கண்களையும் அவர்கள் சேதப்படுத்தியதாக கூறியுள்ளார். இச்சம்பவம் நடந்த சமயத்தில், அவர் இரண்டு மாதம் கர்ப்பமாக இருந்துள்ளார். பெண்களை கடத்தி கொடுமைப்படுத்தும் தலிபான்கள் சிலசமயங்களில், சடலங்களை நாய்களுக்கு இரையாக்குவதாகவும் கூறியிருக்கிறார். இவர், கணவர் மற்றும் குழந்தையுடன் தற்போது இந்தியாவில் வாழ்ந்து வருகிறார்.