இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்துடன் அப்சர்வர் ரிசர்ச் பவுண்டேசன் என்ற அமைப்பு இணைந்து நடத்தும் ரைசினா பேச்சுவார்த்தை மாநாட்டில் முப்படைத் தலைமைத் தளபதி பிபின் ராவத் இன்று கலந்துகொண்டார்.
அப்போது, பாகிஸ்தானை மறைமுகமாக விமர்சித்த அவர், “அரசே பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும்வரை நாம் அச்சுறுத்தலோடுதான் வாழ முடியும். பிரச்னையின் காரணியை கண்டுபிடித்து அதனை அழிக்க வேண்டும்.
பயங்கரவாதத்திற்கு எதிரான போர் முடிவடையும் என நாம் நினைத்தால் அது தவறு. பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் நாட்டை எப்படி நட்பு நாடாகச் சேர்க்க முடியும். அவர்களைத் தனிமைப்படுத்த வேண்டும்.
பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் நாட்டை நாம் கையாள வேண்டும். பயங்கரவாதத்தை கொள்கையாக வைத்திருக்கும் நாட்டை எதிர்கொள்ள வேண்டும்” என்றார்.
தலிபானுடன் பேச்சுவார்த்தைக்கு தயாரா என்ற கேள்விக்கு, பயங்கரவாதத்தை கைவிட்டால் அனைத்துத் தரப்புடனும் அமைதி பேச்சுவார்த்தையைத் தொடங்கலாம் என பதிலளித்தார்.