வீட்டினுள் தூங்கி கொண்டிருந்த தம்பதியை கிராம மக்களே உயிருடன் எரித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஒடிசாவிலுள்ள நிமபல்லி சுரஷாய் என்ற கிராமத்தை சேர்ந்த சரல் பலிமுச்சா மற்றும் சம்பாரி என்ற தம்பதியினர் இரண்டு நாட்களுக்கு முன் வீட்டில் தூங்கி கொண்டிருந்தார்கள். அச்சமயத்தில் வீட்டை நள்ளிரவில் சுற்றி வளைத்த கிராமத்தினர் வீட்டில் இருந்த இருவரையும் தீ வைத்து கொளுத்தினர். அதில் தம்பதியினர் இருவரும் பரிதாபமாக உடல் கருகி உயிர் இழந்தார்கள். பின்னர் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தம்பதியினரின் மகள் மற்றும் மருமகன் இருவரும் அவர்களின் சடலத்தை கண்டு கதறி அழுதுள்ளனர். இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்திய போலீசாருக்கு கடும் அதிர்ச்சி தகவல் கிடைத்தது.
அக்கிராமத்தில் உள்ள சிறுவர், சிறுமியர் பலருக்கு காய்ச்சல் வந்திருக்கின்றது. இதற்கு சரல் மற்றும் சம்பாரி தம்பதியினர் பில்லி சூனியம், மாந்திரீகம் ஆகிய செயல்களைச் செய்தது தான் காரணம் என கிராமத்தினர் அறிந்துள்ளனர். இதனால் கடும் ஆத்திரமடைந்த கிராமத்தினர் தம்பதி இருவரையும் உயிருடன் எரித்து கொன்றுள்ளார்கள் என தகவல் வெளியாகியுள்ளது. இதனைத்தொடர்ந்து காவல்துறையினர் மேலும் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.