Categories
உலக செய்திகள்

தாயின் அஸ்தியுடன் விமான நிலையம் வந்த குழந்தை.. கண்கலங்கிய தந்தை.. மனதை நொறுக்கும் சம்பவம்..!!

தமிழகத்திலிருந்து துபாய்க்கு கைக்குழந்தையுடன் வேலைக்குச்சென்ற பெண் உயிரிழந்த நிலையில், தாயின் அஸ்தியுடன் நாடு திரும்பிய குழந்தையை பார்த்து தந்தை கண் கலங்கியுள்ளார்.

தமிழகத்தில் உள்ள கள்ளக்குறிச்சி என்ற மாவட்டத்தில் வசித்த தம்பதி வேலவன்-பாரதி. இவர்களுக்கு 3 மகன்கள் உள்ளனர். இதில் முதல் குழந்தைக்கு சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டு அதிக பணத்தை செலவு செய்தும் சிகிச்சை பலனளிக்காமல் குழந்தை இறந்தது. எனவே வேறு வழியின்றி வறுமையில் வாடிய குடும்பத்தை காப்பாற்ற, பாரதி தன் 7 மாத குழந்தை தேவேசுடன் துபாய்க்கு சென்று பணிப்பெண்ணாக வேலை செய்து வந்தார்.

இந்நிலையில் பாரதிக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. அதன்பின்பு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. எனவே அவரோடு வேலை செய்யும் பெண்கள் குழந்தை தேவேசை கவனித்துக் கொண்டனர். இந்நிலையில் கடந்த மாதம் 29ஆம் தேதியன்று பாரதி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

எனவே அவரது கணவருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அவர், தன் மனைவியின் உடலை இந்தியாவிற்கு கொண்டு வர பணம் இல்லை. எனவே இறுதிச்சடங்கை துபாயில் செய்து விடுமாறு கோரினார். அதன்படி, அவரின் அனுமதியுடன் பாரதியின் உடல் தகனம் செய்யப்பட்டது. ஆனால்  கைக்குழந்தை தேவேஷ் தாயை காணாமல் தவித்துக் கொண்டிருந்தார்.

அதனைப்பார்த்து பாரதியுடன் பணியாற்றிய பெண்கள் கண் கலங்கினர். இதுதொடர்பாக துபாய் நகர திமுக அமைப்பாளரான எஸ்எஸ் மீரான் அவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பின்பு கள்ளக்குறிச்சியின் எம்பியான கவுதம சிகாமணி, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கவனத்திற்கு கொண்டு சென்றார்.

அவர் உடனடியாக அங்கிருக்கும் திமுக நிர்வாகிகளிடம் கலந்து ஆலோசித்து, தேவையான ஏற்பாடுகளை செய்துள்ளார். அதன்பின்பு குழந்தை தேவேசை திருவாரூரை சேர்ந்த சுரேஷ் துபாயில் இருந்து விமானத்தில் திருச்சிக்கு கொண்டு வந்து தந்தையிடம் பாதுக்காப்பாக ஒப்படைத்திருக்கிறார்.

அப்போது மனைவியின் அஸ்தியுடன் வந்த தன் மகனை பார்த்த வேலன் கண்கலங்கி குழந்தையை கட்டி அணைத்த காட்சி பார்ப்போரின் கண்களை குளமாக்கியது. வேலவன் குழந்தையை பாதுகாப்பாக கொண்டு வர உதவிய தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகளை தெரிவித்தார்.

Categories

Tech |