டெல்லியில் பாஜக தலைமை அலுவலகத்தில் அருண் ஜெட்லியின் உடலுக்கு தமிழக பாஜக தலைவர் தமிழிசை, ஓபிஎஸ் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.
பாஜகவின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதி அமைச்சருமான அருண் ஜெட்லி வயது (66) கடந்த 9-ம் தேதி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று மதியம் 12: 7 மணியளவில் பலனின்றி காலமானார். இதையடுத்து டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்ட அருண் ஜெட்லி உடலுக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், மத்திய அமைச்சர்களான அமித்ஷா, ராஜ்நாத் சிங் உட்பட பாஜக மூத்த தலைவர்களும் அஞ்சலி செலுத்தினர். பிரதமர் மோடி ட்விட்டரில், இரங்கல் தெரிவித்ததுடன் தொலைபேசியில் ஜெட்லி குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்து, புகழ்ந்து கூறியிருந்தார். மேலும் தமிழக முதல்வர் மற்றும் துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் தனது ட்விட்டர் பக்கத்தில் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் இருந்து டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்திற்கு அருண் ஜெட்லியின் உடல் கொண்டு வரப்பட்டு அஞ்சலிக்க்காக வைக்கப்பட்டுள்ளது. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் பாரதீய ஜனதா கட்சியின் தேசிய செயற்குழு தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோர் கட்சி தலைமையகத்தில் அருண்ஜெட்லிக்கு மலர் தூவி மரியாதை செலுத்திய பின் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
அப்போது தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். அத்துடன் தமிழக அமைச்சர்கள் ஜெயக்குமார், தங்கமணி உள்ளிட்டோரும் அருண் ஜெட்லி உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். மேலும் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜனும் அருண் ஜெட்லி உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். அதை தொடர்ந்து நிகாம் போத் காட் பகுதியில் இறுதி சடங்குகள் நடைபெற உள்ளன.