2020-21 நிதியாண்டுக்கான தமிழ்நாடு பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படுகிறது. நிதியமைச்சரும், துணை முதலமைச்சருமான ஓ. பன்னீர்செல்வம் ஒன்பதாவது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்கிறார். பொதுவாகவே மாநில பட்ஜெட் என்பது நிதி நிலையை விளக்கும் ஆவணமாக அல்லாமல் அரசின் கொள்கைகளையும், திட்டங்களையும் மக்களிடம் கொண்டு செல்லும் பிரசாரமாகவே இருக்கும். இந்த பட்ஜெட்டும் அதற்கு விதிவிலக்காக இருக்காது.
மோசமான நிதி நிலை:
தற்போதைய சூழலில் அரசின் நிதி நிலைமை மோசமாக உள்ளது. அரசின் கடன் சுமையும், நிதிப் பற்றாக்குறையும் தொடர்ந்து அதிகரித்துவருகிறது. அதே சமயத்தில் புதிய வருவாய் எதுமில்லாமல் உள்ளது. 2019- 2020 நிதியாண்டில் அரசின் ஒட்டுமொத்த கடன் சுமை சுமார் ரூ.4 லட்சம் கோடி (சரியாக ரூ.3,97,496) இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. அரசின் வருவாய் பற்றாக்குறை ரூ. 14,315 கோடியாகவும், நிதிப்பற்றாக்குறை ரூ.44,176 கோடியாகவும் இருக்கும் என கடந்த பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அரசின் ஜிடிபி கடனுக்குமான விதிகம் 23 சதவிகிதமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த கணிப்புகளை விட அதிகமாக கடன், வருவாய் பற்றாக்குறை இருக்கும் என கூறப்படுகிறது.
மத்திய அரசு நிதி:
மத்திய அரசிடம் இருந்து கிடைக்கும் நிதியை பெற போராட வேண்டிய நிலை உள்ளது. ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகையாக தமிழ்நாடு அரசுக்கு சேர வேண்டிய நிதியை மத்திய அரசு உடனடியாக தர வேண்டும் என வலியுறுத்தப்பட்டுவருகிறது. ஆனால் மத்திய அரசும் நெருக்கடியை சந்தித்து வருவதால் மாநிலங்களுக்கான ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகை வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
நிதிக்குழு பங்கீடு:
தமிழ்நாட்டிற்கு உள்ள மற்றொரு பிரச்னை நிதிக்குழு பங்கீடு. மத்திய அரசு மாநில அரசுகளுக்கு எவ்வளவு நிதியை பகிர்ந்து அளிக்க வேண்டும், அதனை மாநிலங்களுக்குள் எவ்வாறு பகிர வேண்டும் என தீர்மானிக்கும் அமைப்பாக நிதிக்குழு உள்ளது. 2020- 2021 நிதியாண்டுக்கான 15ஆவது நிதிக்குழுவின் இடைக்கால அறிக்கை நாடாளுமன்றத்தில் கடந்த பிப்ரவரி 1ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டது.
இதில் உள்ள அளவீடுகள் மக்கள் தொகை குறைவாக உள்ள, அதிக வளர்ச்சி கண்டுள்ள மாநிலங்களுக்கு, குறிப்பாக தென் மாநிலங்களுக்கு எதிராக உள்ளதாக குற்றம்சாட்டப்படுகிறது. இந்த நிதிக்குழு பங்கீட்டு விதிமுறைகளால் தமிழ்நாட்டிற்கு ரூ. 6 ஆயிரம் கோடி இழப்பு ஏற்படும் என பொருளாதார பேராசிரியர்கள் கூறுகின்றனர்.
பொருளாதார மந்த நிலையால் மத்திய அரசின் வரி வசூலும் குறைந்து வருவதால் அதிலிருந்து தமிழ்நாட்டிற்கு கிடைக்கும் நிதியின் அளவு மேலும் குறையும். இந்த நிலையில், தமிழ்நாடு அரசு இந்த பட்ஜெட்டில் எவ்வாறு நிதி ஆதாரங்களை திரட்டப்போகிறது என்பதை கவனிக்க வேண்டும்.
அதிமுகவின் கடைசி பட்ஜெட்!
2021இல் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதனால் இதுவே ஆளும் அதிமுக அரசின் கடைசி முழு பட்ஜெட் என்பதால் பெரிய திட்டங்கள், கவர்ச்சிகர அறிவிப்பகள் நிச்சயம் இடம்பெறும். இதைத்தவிர்த்து, வேளாண்மை, நீர்பாசனம், கல்வி, சுகாதாரம், சாலை உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், பொது விநியோகம், உணவு மாநியம், தொழில்நுட்பம் உள்ளிட்டவற்றுக்கு எந்த அளவுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது என்பதை கவனிக்க வேண்டும்.
புதிய வரி?
இந்தக் கடன் சுமையில் இருந்து மீண்டு வருவாயை பெருக்கும் திட்டங்களும் முக்கியமானது. கடன் சுமை அதிகரிப்பதால் வளர்ச்சி திட்டங்கள், மக்கள் நலத் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யாமல் கடன்களுக்கான வட்டி கட்டுவதற்கே ஏராளமான நிதியை ஒதுக்க வேண்டிய சூழல் ஏற்படும். ஆனால் வாக்குகளை மனதில் வைத்து புதிய வரி விதிப்பு ஏதும் இடம்பெறாது என கூறப்படுகிறது.
தொழில்துறை:
தற்போது மாநிலத்தில் நிலையான ஆட்சி நடைபெறுகிறது. தொழில்துறையும் சிறப்பாகவே செயலாற்றி வருவதாக பல்வேறு தரப்பினரும் கூறுகின்றனர். உலக பொருளாதார சூழ்நிலை மந்த கதியில் உள்ள போதிலும் தமிழ்நாட்டில் புதிய தொழிற்சாலைகள் தொடங்கப்படுகிறது. புதிய முதலீடுகளால் தொழில்துறைக்கு போதிய ஆதரவு அளிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.
அதே நேரத்தில் அரசு பெரு நிறுவனங்களில் மட்டுமே கவனம் செலுத்திகிறது. ஸ்டார்ட் அப் என்றழைக்கப்படும் புதிய தொழில்களில் இந்த அரசு கவனம் செலுத்துவதில்லை என தொழில்துறையினர் கூறுகின்றனர். இது தொடர்பான அறிவிப்புகள் ஏதும் இந்த பட்ஜெட்டில் இருக்குமா என்பதை பார்க்க வேண்டும்.
மக்களின் எதிர்பார்ப்பு..?
அரசியல் அரங்கிலும் உற்று நோக்கப்படும் பட்ஜெட்டாக இது இருக்கும். கருணாநிதி, ஜெயலலிதா போன்ற இரண்டு மிகப் பெரிய தலைவர்கள் இல்லாமல் வரும் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. தங்களது இடத்தை தக்கவைக்க வேண்டிய கட்டாயத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், திமுக தலைவரான மு.க. ஸ்டாலினும் உள்ளனர்.
மக்கள் நலனை கருத்தில் கொண்டு, நீண்ட கால வளர்ச்சிக்கான பட்ஜெட்டாக இருக்குமா, தேர்தலை குறிவைத்த பட்ஜெட்டாக இருக்குமா, மக்களின் எதிர்பார்ப்பை இந்த பட்ஜெட் பூர்த்தி செய்யுமா, அவர்களின் வாழ்க்கையை மேம்படுத்தும் வகையில் இது அமையுமா போன்ற கேள்விகளுக்கு இன்று விடை கிடைத்துவிடும்.