ஊரடங்கால் தமிழகத்தில் உள்ள நிறுவனங்கள் சந்தித்துள்ள பாதிப்புகள் குறித்து சென்னை ஐ.ஐ.டி குழு ஆய்வு செய்து வருகிறது.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுதும் மே 17ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவானது இன்னும் இரண்டு நாட்களில் முடியவடைய உள்ளது. இதை தொடர்ந்தும் 4ம் கட்ட ஊரடங்கு இருக்கும் என்றும், ஆனால் அது முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும் என்றும் ஏற்கெனவே பிரதமர் மோடி அறிவித்திருந்தார். அத்துடன் மே 17ம் தேதிக்கு முன்பு ஊரடங்கு நீட்டிப்பு தொடர்பான அறிவிப்பு வெளியாகும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
ஊரடங்கால் நாடு முழுதும் கடை அடைப்பு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளால் நிறுவனங்கள் மற்றும் தொழிலாளர்கள் கடும் பாதிப்புகளை சந்தித்துள்ளனர். தமிழகத்தில் 30 லட்சத்திற்கும் அதிகமான சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் முடங்கியுள்ளன. இந்த நிலையில் தமிழகத்தில் உள்ள சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் சந்தித்துள்ள பாதிப்புகள் குறித்து சென்னை ஐ.ஐ.டியில் செயல்படும் மானுடவியல் துறையின் சார்பில் ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் இயங்கி வரக்கூடிய இந்த நிறுவனங்கள் எத்தகைய பாதிப்பை சந்தித்துள்ளன, பாதிப்பில் இருந்து நீண்ட மற்றும் குறுகிய காலத்திற்குள் அந்த நிறுவனங்கள் மீள்வதற்கு எத்தகைய திட்டங்களை மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்து சென்னை ஐ.ஐ.டி விரிவான அறிக்கை தயாரிக்க உள்ளது. ஊரடங்கு காரணமாக தற்போது வரை தமிழகத்தில் உள்ள சிறு குறு தொழில் நிறுவனங்கள் 44 சதவீதம் அளவுக்கு வருவாய் இழப்பை சந்தித்து உள்ளதாகவும், இது மேலும் நீட்டிக்கப்படும் போது வருவாய் இழப்பு 60 சதவிகிதமாக அதிகரிக்க வாய்ப்புள்ளது என்றும் சென்னை ஐ.ஐ.டி தெரிவித்துள்ளது. தொடர்ந்து ஆய்வுகள் நடைபெற்று வரும் நிலையில் நான்கு வாரத்தில் இந்த ஆய்வு முடிவுகள் வெளியிடப்பட உள்ளன.