மத்திய அரசின் பட்ஜெட் வரவேற்கத்தக்கது என்று தமிழக முதல்வர் பழனிசாமிபாராட்டு தெரிவித்துள்ளார்.
மத்திய அரசின் 2020-2021 ஆண்டுக்கான பட்ஜெட் இன்று பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். பின்னர் நீண்ட நேரம் அவர் வாசித்த உரையில் பல்வேறு திட்டங்கள் குறித்த அறிவிப்புகள் வெளியாகின. இது குறித்து பல்வேறு அரசியல் தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்தநிலையில் பட்ஜெட் குறித்து தமிழக முதல்வர் பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “விவசாயம், பாசன வசதி, ஊரக வளர்ச்சி மேம்பாட்டை மையமாக வைத்து தயாரிக்கப்பட்ட பட்ஜெட் நாட்டு மக்களின் எதிர்காலத்தை மேலும் வளப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. விளை நிலங்களில் சூரிய மின் உற்பத்தி செய்வதற்கான முயற்சி வரவேற்கத்தக்கது. சென்னை- பெங்களூரு விரைவு வழி சாலை ரயில் விரைவில் செய்ல்படுத்தப்படும் என்பது பாராட்டுக்குரியது என்றும் தெரிவித்தார்.
மேலும் ஆதிச்சநல்லூரில் அருங்காட்சியகம் அமைப்பதற்கு தமிழகம் சார்பில் நன்றி தெரிவிக்கிறேன். நீர்ப்பற்றாக்குறையால் அடிக்கடி பாதிக்கும் தமிழகத்திற்கு அதிக நிதி ஒதுக்க வேண்டும். ஓசூர், நெய்வேலி, ராமேஸ்வரத்துக்கு விமான நிலையம் அமைக்க நிதி ஒதுக்கவேண்டும். கோவை, திருச்சி, மதுரை, தூத்துக்குடி விமான நிலைய விரிவாக்கத்திற்கு நிதி ஒதுக்க வேண்டும். நீர் பற்றாக்குறையால் அடிக்கடி பாதிக்கும் தமிழகத்திற்கு அதிக நிதி ஒதுக்க வேண்டும் என்று கூறினார். முன்னதாக காங்கிரஸ், திமுக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் பட்ஜெட் குறித்து விமர்சித்து வந்த நிலையில் முதல்வர் பாராட்டு தெரிவித்துள்ளார்.