தமிழக முதல்வர் பழனிசாமி கர்நாடகா மேகதாது அணை கட்ட அனுமதியளிக்க கூடாது என்று ஜலசக்தித்துறை அமைச்சரிடம் வலியுறுத்தியுள்ளார்
நிதி ஆயோக் கூட்டம் இன்று பிற்பகல் நடைபெற்றது. பிரதமர் மோடி தலைமையில் நடைபெறும் இந்த 5வது நிதி ஆயோக் கூட்டத்தில் மாநில முதலமைச்சர்கள் கலந்து கொள்கின்றனர். அத்துடன் சிறப்பு விருந்தினர்களாக மத்திய அமைச்சர்கள் அழைக்கப்பட்டுள்ளனர். இதில் கலந்து கொள்வதற்கு தமிழக முதல்வர் பழனிசாமியும் டெல்லி சென்றுள்ளார்.
இந்நிலையில் பிரதமர் மோடியை முதல்வர் பழனிச்சாமி காலை டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து பேசியுள்ளார். இந்த சந்திப்பின் போது அவருடன் அமைச்சர் ஜெயக்குமார், தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் உள்ளிட்டோர் உடனிருந்தனர். இந்த சந்திப்பில், தமிழகத்தின் வறட்சி, காவிரி நீர் பிரச்சனை மற்றும் தமிழகத்தின் பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் உள்ளிட்டவை குறித்து பழனிச்சாமி மோடியிடம் எடுத்துரைத்ததாக கூறப்படுகிறது. இதனிடையே மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதா ராமனை முதல்வர் பழனிசாமி சந்தித்து பேசினார்.
பின்னர் ஜலசக்தித்துறை அமைச்சர் கஜேந்திரசிங் ஷெகாவத்தை சந்தித்து பேசிய பழனிசாமி, காவிரி நதி நீர் ஆணைய உத்தரவின்படி கர்நாடகா தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட வேண்டும் என்றும், மேகதாது அணை கட்டுவதற்கு கர்நாடகாவுக்கு அனுமதியளிக்க கூடாது என்றும் வலையுறுத்தியுள்ளார். ஏற்கனவே கர்நாடக முதல்வர் மேகதாது அணை தொடர்பாக கஜேந்திரசிங்கை சந்தித்த நிலையில் தமிழக முதல்வர் பழனி சாமியும் சந்தித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.