சென்னையில் நேற்று மாலையில் இருந்து தற்போது வரை 22 பேர் உயிரிழந்திருக்கிறார்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது .
தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கின்றது. குறிப்பாக சென்னையில் பார்க்கும் போது அதிகப்படியாக கொரோனா பாதித்த நபர்களும் தினசரி கண்டறியப்பட்டு வருகிறார்கள். அதேவேளையில் குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டிருக்கின்றன. நேற்றுவரை வெளியான நிலவரப்படி 33 ஆயிரத்து 244 நபர்களுக்கு சென்னையில் கொரோனா தொற்று கண்டறியப்பட்டு, 15,389 நபர்கள் நலம் பெற்று வீடு திரும்பி இருந்தாலும் சென்னையில்தான் அதிக படியான உயிரிழப்புகள் 382ஆக பதிவாகியுள்ளது.
இந்த சூழ்நிலையில் நேற்று இரவில் இருந்து தற்போது வரை காலை 9 மணி வரை சென்னையில் மட்டுமே 22 உயிரிழப்புகள் நடந்து இருப்பதாக தகவல் கிடைத்திருக்கிறது. அதில் ஆயிரம் விளக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த அண்ணாசாலை சேர்ந்த 67 வயது மூதாட்டி இன்று காலை உயிரிழந்தார். சூளைமேடு சேர்ந்த 72 வயது ஆண் போரூரில் உள்ள தனியார் மருத்துமனையில் சிகிச்சைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார் என்று சொல்லப்படுகின்றது.
ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 7 நபர்களும், சென்னை ஓமந்தூரார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 4 நபர்கள், ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் வியாசர்பாடியை சேர்ந்த மூதாட்டி, திருவொற்றியூரை சேர்ந்த முதியவர் உள்ளிட்ட 5 பேரை இதுவரை உயிரிழந்திருக்கிறார்கள். அதே போல கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 3 நபர்கள் உயிரிழந்துள்ளதை அடுத்து மொத்தமாக 21 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுவரை தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 479லிருந்து 501ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 382லிருந்து 404ஆக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.