தமிழகத்தில் அரசாணை 115 பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதற்கு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் சார்பில் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டிருப்பதாவது, கடந்த அக்டோபர் மாதம் 18-ஆம் தேதி தமிழக அரசு மனித வள மேம்பாட்டு துறை அரசாணை 115-ஐ பிறப்பித்துள்ளது. இது அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் வேலை வாய்ப்புக்காக பதிவு செய்துவிட்டு காத்திருக்கும் லட்சக்கணக்கான இளைஞர்களின் மனதில் பெரும் குழப்பத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
அந்த அரசாணையின்படி காலி பணியிடங்கள் அதிக அளவில் இருக்கும் பட்சத்தில் சம்பளம் மற்றும் ஓய்வூதிய செலவினங்களும் அதிகமாக இருக்கும் நிலைதான் இருக்கிறது. தமிழக சட்டப் பேரவையில் மனித வள சீரமைப்பு குழு அமைக்கப்படும் என நிதியமைச்சர் கூறியிருந்தது போன்று தற்போது மனிதவள சீரமைப்பு குழு அமைக்கப்பட்டதாக அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு சட்டப்பேரவையில் நிதியமைச்சர் கூறிய போதே அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் முதல்வர் ஸ்டாலின் உங்களுடைய கோரிக்கைகளை நிறைவேற்றுவார் என்றும் நிதி அமைச்சரின் வாக்குகளை பற்றி கவலைப்பட வேண்டாம் எனவும் கூறப்பட்டது.
தற்போது அரசாணையில் சீரமைப்பு குழு என்று இருக்கிறதே தவிர மேம்பாட்டு குழு என்று இல்லை. இந்த நடவடிக்கைகள் அனைத்தும் மக்கள் நலன் என்ற வார்த்தைகளை அழிந்து போன இனங்களுக்கான பட்டியலில் சேர்ப்பதற்கான உச்சகட்ட நடவடிக்கையாகவே தெரிகிறது. அரசு சேவைகளை தனியாரிடம் ஒப்படைத்துவிட்டு தங்களுடைய கடமைகளிலிருந்து விலகிக் கொள்ள நினைக்கிறது. ஏற்கனவே காலியாக இருக்கும் 50 சதவீதத்திற்கும் மேலான டி பிரிவு பணியிடங்களை நிரப்பாமல் இருக்கும் சூழ்நிலையில் தற்போது சி பிரிவு பணியிடங்களை தனியாருக்கு தாரை வார்ப்பதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஒப்பந்த அடிப்படையில் பணியாளர்களை நியமிப்பது என்பது அரசாங்கமே கொத்தடிமை ஊழியர்களை உருவாக்குவது போன்றதாகும். அரசாங்கத்தால் வழங்கப்படும் அனைத்து விதமான நன்மைகளும் தனியாரிடம் வழங்கப்பட மாட்டாது. தனியார் மைய நடவடிக்கைகள் என்பது மீண்டும் கிழக்கிந்திய கம்பெனிகளிடம் ஒப்படைக்கும் நடவடிக்கை என்பதை மறந்து விடக்கூடாது. மேலும் இப்படிப்பட்ட ஒரு ஆபத்தான அரசாணையை தமிழக முதல்வர் திரும்ப பெற வேண்டும் என அரசு ஊழியர்கள் சார்பில் கேட்டுக் கொள்ளப்படுகிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.