முகக்கவசம் அணியாதவர்களை கடைகளில் அனுமதிக்கக்கூடாது என அனைத்து வணிக நிறுவனங்களுக்கும் கட்டுப்பாடு விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 30 ஆயிரத்தை கடந்துள்ளது. மேலும் தமிழகம் முழுவதும் பல்வேறு தளர்வுகளுடன் 5ம் கட்ட ஊரடங்கு ஜூன் 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், தளர்வுகள் காரணமாக கொரோனா பாதிப்பு மேலும் அதிகரித்து விடக்கூடாது என்பதற்காக தமிழகத்தில் அனைத்து வணிக நிறுவனங்களுக்கும் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து தலைமை செயலாளர் சண்முகம் அரசாணை ஒன்றை வெளியிட்டுள்ளார். அவை பின்வருமாறு,
* முகக்கவசம் அணியாமல் வருபவர்களை கடைக்குள் அனுமதிக்கக்கூடாது.
* வாடிக்கையாளர்கள் தங்கள் கைகளை கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்த பிறகு தான் கடைகளுக்கு உள்ளே அனுமதிக்க வேண்டும்.
* கடைகளில் வேலை புரியும் பணியாளர்களுக்கு சலி, காய்ச்சல் போன்ற அறிகுறி இருக்கும் பட்சத்தில் அவர்களை பணியில் அமர்த்தக்கூடாது.
* கடைகளில் இருக்கும் பணியாளர்கள் மற்றும் உரிமையாளர்கள் ஆகியோர் கையுறைகள் மற்றும் முகக்கவசங்களை அணிவது கட்டாயம்.
* வாடிக்கையாளர்கள் தனிமனித இடைவெளியுடன் பொருட்களை வாங்க ஏற்பாடு செய்ய வேண்டும்.
* கடைகளில் இருக்கும் ஊழியர்களுக்கு கொரோனா அறிகுறி இருந்தால் அவர்கள் 7 நாட்கள் சுயதனிமையில் ஈடுபட வேண்டும். மேலும், முறையான பரிசோதனையை மேற்கொள்ளவேண்டும்.
கொரோனா பரவல் மேலும் அதிகரிக்காமல் தடுக்க, மேற்கண்ட நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும் என அனைத்து வணிக நிறுவனங்களுக்கும், தனி கடைகளுக்கும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.