தமிழக அரசின் கொரோனா தடுப்பு பணிகள் சிறப்பாக உள்ளது என முதல்வர் பழனிசாமியை சந்தித்து ஐசிஎம்ஆர் அதிகாரிகள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
கொரோனா தடுப்பு நடவடிக்கையில் தமிழக அரசு முன்னோடியாக செயல்படுகிறது என அவர்கள் கூறியுள்ளனர். சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் பழனிசாமியை சந்தித்து ஐசிஎம்ஆர் நிறுவனத்தை சேர்ந்த சென்னை தேசிய தொற்று நோய் இயக்குனர், துணை இயக்குனர் பாராட்டு தெரிவித்துள்ளனர். உடன் மருத்துவர்கள் மனோஜ் முரேக்கர், பிரதீப் கவுர் ஆகியோரும் நேரில் சந்தித்து பாராட்டு கூறியுள்ளனர்.
அமைச்சர் விஜயபாஸ்கர், தலைமை செயலாளர் சண்முகம் மற்றும் சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் ஆகியோரும் உடனிருந்தனர். தமிழகத்தில் இதுவரை கொரோனா வைரஸால் 11,760 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நாளுக்கு நாள் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்தாலும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு குணடமடைந்தவர்கள் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
இதுவரை குணமடைந்தவர்கள் மொத்த எண்ணிக்கை 4,406 ஆக அதிகரித்துள்ளது. நேற்றைய நிலவரப்படி தமிழகத்தில் இதுவரை கொரோனோவால் பாதித்த 37.47% பேர் குணமடைந்துள்ளனர் என சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. மேலும் கொரோனோவால் பாதிக்கப்பட்டவர்களில் மொத்த பலி எண்ணிக்கை 81 ஆக உள்ளது. மற்ற மாநிலங்களுடன் ஒப்பிட்டு பார்க்கும் போது தமிழகத்தில் மிக குறைவான அளவே உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகம் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் சிறப்பாக உள்ளதே இதற்கு காரணம் என்பதில் சந்தேகமில்லை.