சுகாதாரத்தில் மொத்த இந்திய நாட்டின் வளர்ச்சியை காட்டிலும் தமிழகத்தின் வளர்ச்சி அதிகமாக உள்ளது என்று துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்.
சென்னை அமிர்த கரையில் 3 லட்சம் சதுர அடியில் கட்டப்பட்டுள்ள எம்ஜிஎம் ஹெல்த்கேர் மருத்துவமனையின் திறப்பு விழா இன்று நடைபெற்றது. இதில் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோர் பங்கேற்றனர். விழாவில் கலந்து கொண்ட அனைவரையும் MGM மருத்துவமனையின் இயக்குனர் பிரசாந்த் ராஜகோபாலன் வரவேற்றார்.
இதையடுத்து குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு மருத்துவமனையை திறந்து வைத்தார். அதன் பின் தொடர்ந்து நிகழ்வில் பேசிய அவர், தமிழ்நாடு வேகமாக வளர்ந்து கொண்டிருக்கிறது என்றும், முன்னேற்றப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது என்றும் தெரிவித்தார். மேலும் சுகாதாரத்தில் மொத்த இந்திய நாட்டின் வளர்ச்சியை காட்டிலும் தமிழகத்தின் வளர்ச்சி அதிகம் காணப்படுகிறது என்றும், செல்வதைக் காட்டிலும் சுகாதாரம் தான் முதன்மையானது என்றும் தெரிவித்த அவர், தொற்றா நோய்கள் குறித்த விழிப்புணர்வை மாணவர்களிடம் இளைஞர்களிடம் ஏற்படுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.