தமிழ்நாடு செவிலியர் கவுன்சிலில் திருநங்கை ரக்ஷிகா ராஜ் என்பவர் தனது பெயரை பதிவு செய்ய கோரி தொடர்ந்த வழக்கிற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருநங்கை ரக்ஷிகா ராஜ் என்பவர் செவிலியர் படிப்பை முடித்துவிட்டு தமிழ்நாடு செவிலியர் கவுன்சிலில் பதிவு செய்ய 3ஆம் பாலின பெண் என விண்ணப்பத்தை நிரப்பி அளித்திருந்தார். இதையடுத்து ரக்ஷிகா அளித்த விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் ரக்ஷிகா. இந்நிலையில் வழக்கானது இன்று விசாரணைக்கு வந்த நிலையில்,
தமிழக அரசின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், 3ஆம் பாலினத்தவர்களின் பதிவு குறித்த கவுன்சில் விதிகளில் மாற்றம் செய்ய இருப்பதாகத் தெரிவித்தார். மேலும் மனுதாரரை பொறுத்தவரையில் 3ஆம் பாலின பெண் என பதிவு செய்ய இடைக்கால ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இதை ஏற்றுக்கொண்ட உயர்நீதிமன்றம் , தமிழ்நாடு செவிலியர் கவுன்சில் சட்ட விதிகளில் மாற்றம் கொண்டு வரும் வரை திருநங்கை ரக்ஷிகா ராஜின் பெயரை செவிலியர் கவுன்சிலில் தற்காலிகமாக பதிவு செய்ய உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தது.