தமிழகத்திற்கு ஆக்ஸிஜனை அனுப்பி வைத்த கேரள முதல்வருக்கு என் மனமார்ந்த நன்றிகள் என்று சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கடந்த மாதம் முதலே கொரோனா தொற்று தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. தமிழகத்தில் மே 10ஆம் தேதி முதல் 24ஆம் தேதி முழு ஊரடங்கு என்ற அறிவிப்பையும் வெளியிட்டு உள்ளது. இந்தியாவில் பல மாநிலங்களில் ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டு வருகின்றது. அதேபோல் தமிழகத்திலும் சில மாவட்டத்தில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதையடுத்து கடந்த 4ஆம் தேதி தமிழகத்திற்கு ஆக்சிஜன் தருமாறு முதல்வர் பினராயி விஜயனுக்கும் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் கடிதம் எழுதியிருந்தார். மேலும் இதன் மூலம் தமிழகத்தில் தென் மாவட்டங்கள் பயனடையும் என்று அவர் குறிப்பிட்டிருந்தார். அதையடுத்து இன்று கேரளா மாநிலத்தில் இருந்து 31 மெட்ரிக் டன் ஆக்சிஜன் தமிழகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதற்கு சு. வெங்கடேசன் முதல்வருக்கு தனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துள்ளார்.