தென்மேற்கு பருவக்காற்று காரணமாக தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், வட தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், நகரின் சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீனவர்களுக்காக எச்சரிக்கை:
மத்திய மேற்கு வங்கக்கடல், ஆந்திரா, ஒரிசா கடற்கரை மற்றும் அதனை ஒட்டிய வட மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவும் குறைந்த காற்றழுத்த பகுதியின் காரணமாக சூறாவளி காற்று 40 முதல் 55 கி.மீ வரை வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, ஜூன் 11ம் தேதி முதல் ஜூன் 12ம் தேதி வரை மன்னார்வளைகுடா வடதமிழகம் மற்றும் ஆந்திர கடலோர பகுதி, தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் மீன்பிடிக்க செல்லவேண்டாம் என தெரிவித்துள்ளது.
அதேபோல ஜூன் 11ம் தேதி முதல் ஜூன் 15ம் தேதி வரை தென்மேற்கு மற்றும் மத்திய அரபிக்கடல், மத்திய கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய கர்நாடகா, கொங்கன் கடலோர பகுதிகளில் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. கடல் அலை 3.5 முதல் 3.8 மீட்டர் வரை குளச்சல் கடல் பகுதி முதல் தனுஷ்கோடி வரை ஒருசில நேரங்களில் எழும்பக்கூடும் என தெரிவித்துள்ளது.