தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் குரூப் 1 தேர்விற்கான அனைத்துப் பணிகளையும் முடித்ததோடு , ஒரு ஆண்டிற்குள்ளாக இறுதி முடிவையும் வெளியிட்டு வரலாற்று சாதனைப் படைத்துள்ளது.
இது குறித்து அதன் செயலாளர் நந்தகுமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ” தேர்வாணையம் தொடங்கப்பட்ட காலத்திலிருந்து தொகுதி 1 பணிகளில், மிக அதிக எண்ணிக்கையிலான 181 காலிப்பணியிடங்களுக்காக, அதிக எண்ணிக்கையிலான தேர்வர்கள் பங்கேற்ற முதன்மை எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வின் முடிவுகளை, அறிவிக்கை வெளியிடப்பட்ட நாளிலிருந்து ஓராண்டுக்குள் வெளியிட்டு தேர்வாணையம் சாதனை புரிந்துள்ளது.
இந்த தேர்வில் அதிகப்படியான விடைத்தாள்கள் மதிப்பீடு செய்யப்பட்டு முடிவுகள் மிகக் குறுகிய காலத்திற்குள் வெளியிடப்பட்டுள்ளது. இந்திய அளவில், மத்திய அரசுப்பணியாளர் தேர்வாணையம் உட்பட எந்த மாநிலத் தேர்வாணையமும், தொகுதி 1க்கு இணையான பதவிகளுக்காக தேர்வினை ஓராண்டுக்குள் முடித்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இது தேர்வாணைய வரலாற்றில் ஒரு மிகப்பெரிய சாதனையாக கருதப்படுகிறது.