இந்தியாவில் மத்திய அரசின் தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் மாணவர்கள் சேர்வதற்கு ஜேஇஇ நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. இந்த தேர்வுக்கான விண்ணப்பத்தில் தற்போது தமிழக மாணவர்களுக்கு பிரச்சனை ஏற்பட்டுள்ளது. அதாவது ஜேஇஇ நுழைவு தேர்வுக்கு விண்ணப்பிக்க மாணவர்கள் கட்டாயமாக 10-ம் வகுப்பு மதிப்பெண்ணை குறிப்பிட வேண்டும் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது. ஆனால் கடந்த வருடம் தமிழகத்தில் கொரோனா பரவலின் காரணமாக 10-ம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் ஆல்பாஸ் என்று அறிவிக்கப்பட்டதால் அவர்களுடைய மதிப்பெண்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.
இதனால் 10-ம் வகுப்பு மதிப்பெண்களை மாணவர்களால் விண்ணப்பத்தில் பதிய முடியாது. இதன் காரணமாக தமிழக மாணவர்களுக்கு ஜேஇஇ நுழைவுத் தேர்வு விண்ணப்பத்தில் 10-ம் வகுப்பு மதிப்பெண்கள் பதிவு செய்ய வேண்டும் என்பதிலிருந்து விலக்கு அளிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி தேசிய தேர்வு முகமைக்கு தமிழக பள்ளிக்கல்வித்துறை கடிதம் எழுதி அனுப்பியுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் காகர்லா உஷா தெரிவித்துள்ளார். மேலும் இவர் தேசிய தேர்வு முகமைக்கு கடிதம் எழுதிய அனுப்பியுள்ளதால் ஜேஇஇ நுழைவுத் தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் பதற்றம் அடையாமல் தேர்வுக்கு தயாராகுமாறும் கூறியுள்ளார்.