Categories
அரசியல் மாநில செய்திகள்

அமைதி பூங்காவான தமிழகம்…! அமளிக்காடாக ஆகிடுச்சு.. இரும்பு கரம் கொண்டு அடக்க ஓபிஎஸ் வலியுறுத்தல் ..!!

சட்டம் ஒழுங்கை சந்திக்க வைத்துள்ள திமுக அரசுக்கு கடும் கண்டனம் மற்றும் இதனை உடனடியாக சீர் செய்ய திமுக அரசை வலியுறுத்தல் என்ற தலைப்பில் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

திமுக ஆட்சி பொறுப்பிற்கு வந்தாலே சட்ட ஒழுங்கு சீர்குலைவு ஏற்படும் என்பது தமிழ்நாட்டு மக்களின் பொதுவான கருத்தாகும். இதற்கு உதாரணமாக 1990 ஆம் ஆண்டு சென்னையில் பட்ட பகலில் பத்மனாபா மற்றும் 13 பேர் கொலை செய்யப்பட்டது; 1998 ஆம் ஆண்டு கோவை குண்டுவெடிப்பு; 2006 ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சி தேர்தல் வரலாறு காணாத வன்முறை,  2008 ஆம் ஆண்டு சென்னையில் சட்ட கல்லூரி மாணவர்கள் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்ட போது அதை வேடிக்கை பார்த்தது; 2009 ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுமக்கள், நீதிபதிகள், வழக்கறிஞர்கள் மீது கொடூர தாக்குதல் நடைபெற்றது;

பாலியல் துன்புறுத்தல்கள்:

2019ஆம் ஆண்டில் அப்போதைய முதலமைச்சர், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி, காவல்துறை தலைமை இயக்குனர் ஆகியோர் முன்னிலையில் திமுக ரவுடி கும்பல் வழக்கறிஞர்களையும், பத்திரிகையாளர்களையும் தாக்கியது என பலவற்றை எடுத்துச் சொல்லலாம். இந்த வகையில், 2021 ஆம் ஆண்டு திமுக ஆட்சி பொறுப்பேற்றத்திலிருந்து கொலை, கொள்ளை மற்றும் பாலியல் துன்புறுத்தல்கள் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது.

கவுன்சிலரின் ஆதிக்கம்:

இது தவிர நியாய விலைக் கடைகள், அம்மா உணவகங்கள், தடுப்பூசி மையங்கள் என அனைத்திலும் திமுகவினர் ஆதிக்கம் கொடிகட்டி பறப்பதும், அரசு ஊழியர்கள் மற்றும் காவல்துறையினரை திமுகவினர் மிரட்டுவதும், அரசு அதிகாரிகயை நாடாளுமன்ற உறுப்பினர்கள் மிரட்டுவதும்,  ஒப்பந்ததாரர்களையும், தனியார் நிறுவன அதிகாரிகளையும் சட்டமன்ற உறுப்பினர்கள் மிரட்டுவதும்,  கவுன்சிலரின் ஆதிக்கம் தலைவிரித்து ஆடுவதும் வாடிக்கையாக இருந்து வருகிறது.

பெட்ரோல் குண்டு வீச்சு:

 

இந்த வரிசையில் கடந்த இரண்டு மூன்று நாட்களாக பாரதிய ஜனதா கட்சி அலுவலகங்கள், ஆர்.எஸ் அலுவலகங்கள் மற்றும் அதன் நிர்வாகிகளின் வீடுகள் மீது பெட்ரோல் குண்டு வீச்சு நடைபெற்று வருகிறது. முதலில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் தொடங்கிய இந்த பெட்ரோல் குண்டு வீச்சு, ஈரோடு, ராமநாதபுரம், மதுரை, திண்டுக்கல், செங்கல்பட்டு, சேலம், திருப்பூர், கன்னியாகுமரி என தமிழ்நாடு முழுவதும் பரவி உள்ளது. இதில் அப்பாவி மக்களின் வாகனங்கள் சேதமடைந்துள்ளதாகவும் பத்திரிகைகளின் செய்திகள் வந்துள்ளன.

அமைதிக்கு குந்தகம்:

 

பாட்டில்களின் பெட்ரோல் கிடையாது என்று சொல்லும் அளவுக்கு பெட்ரோல் குண்டு வீச்சு தமிழ்நாட்டில் நடைபெறுகிறது என்றால் இதற்கு திமுக அரசின் மெத்தனப் போக்கே காரணமாகும். இதனை முலையிலேயே கிள்ளி எரிந்திருந்தால் இந்த அளவுக்கு மோசமான நிலைமை ஏற்பட்டிருக்காது. எங்கு, எப்போது பெட்ரோல் குண்டு வீசப்படுமோ என்று மக்கள் அச்சப்படும் அளவுக்கு நிலைமை மிக மோசமாக உள்ளது. பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் இச்செயலுக்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கின்றேன்.

அமைதி பூங்கா:

மாண்புமிகு அம்மா அவர்களுடைய ஆட்சி காலத்திலேயே அமைதி பூங்காவாக விளங்கிய தமிழகம் இன்று அமளிக்காடாக காட்சியளிக்கிறது. பொதுமக்களின் உயிருக்கும் உடைமைக்கும் ஆபத்து ஏற்படும் சூழ்நிலை உருவாகியுள்ளன. பொதுமக்கள் நடமாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இது மிகவும் கவலை அளிக்கக்கூடிய ஒன்றாகும். இந்த நிலை தொடர்ந்தால் சட்டம் ஒழுங்கு மட்டுமல்லாமல்,  நாட்டின் பொருளாதாரம், தொழில் வளர்ச்சியும் சீரழியும் நிலைமை உருவாகும். இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறுவதற்கு காரணம் அரசு உறுதியான நடவடிக்கை எடுக்காதது தான் என்ற எண்ணம் தற்போது பொதுமக்களிடையே மேலோங்கி உள்ளது.

இரும்பு கரம் கொண்டு அடக்குக:

 

பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபடுவோரை கண்டறிந்து, அவர்களை இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டிய கடமை அரசாங்கத்திற்கு உண்டு. எனவே மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இதில் உடனடியாக தலையிட்டு, தமிழ்நாட்டின் அமைதியை குலைக்கும்  நடவடிக்கையில் ஈடுபடுவோரை அடையாளம் கண்டு அவர்களை இரும்பு கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என்றும்,  இனிமேல் இது போன்ற நிகழ்வுகள் நிகழாமல் இருப்பதற்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கையை எடுக்க வேண்டும் எனவும்,  அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வலியுறுத்தி கேட்டுக்கொள்கின்றேன் என தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Categories

Tech |