நடப்பு சீசனுக்கான சையத் முஷ்டாக் அலி டி20 தொடர் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இதில்,நேற்று நடைபெற்ற குரூப் பி பிரிவுக்கான போட்டியில் தமிழ்நாடு அணி 37 ரன்கள் வித்தியாசத்தில் கேரளாவை அவர்களது சொந்த மண்ணில் வீழ்த்தியது. இந்த நிலையில் திருவனந்தபுரத்தில் இன்று நடைபெற்ற குரூப் பி பிரிவுக்கான போட்டியில் தமிழ்நாடு அணி, ராஜஸ்தான் அணியுடன் பலப்பரீட்சை நடத்தியது. இதில், டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.
அதன்படி, முதலில் பேட்டிங் செய்த தமிழ்நாடு அணி, கேப்டன் தினேஷ் கார்த்திக்கின் அதிரடியால் 20 ஓவர்களில் ஐந்து விக்கெட்டுகளை இழந்து 155 ரன்களை எடுத்தது. தமிழ்நாடு அணியில் அதிகபட்சமாக தினேஷ் கார்த்திக் 30 பந்துகளில் ஐந்து பவுண்டரி, இரண்டு சிக்சர் என 48 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். முரளி விஜய் 35 ரன்களும், ஜெகதீசன் 34 ரன்களிலும் அவுட்டாகினர்.
இதைத்தொடர்ந்து, 156 ரன்கள் என்ற ஆவரேஜ் ஸ்கோரை தமிழ்நாடு அணியின் பந்துவீச்சாளர்கள் சிறப்பாக டிஃபெண்ட் செய்தனர். இவர்களது பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்த ராஜஸ்தான் அணி, 20 ஓவர்களின் முடிவில் எட்டு விக்கெட்டுகளை இழந்து 116 ரன்களை மட்டுமே எடுத்தது.
இதனால், தமிழ்நாடு அணி இப்போட்டியில் 39 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இதன்மூலம், அந்த அணி இந்த சீசனில் விளையாடிய இரண்டு போட்டிகளிலும் வெற்றிபெற்று எட்டு புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. தமிழ்நாடு அணி தரப்பில் சாய் கிஷோர் மூன்று, நடராஜன், பெரியசாமி, முருகன் அஸ்வின், விஜய் சங்கர் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை எடுத்தனர். நாளை மறுநாள் நடைபெறும் மற்றொரு லீக் போட்டியில் தமிழ்நாடு அணி, உத்தரப் பிரதேச அணியை எதிர்கொள்கிறது.