Categories
தேசிய செய்திகள்

தமிழ் புத்தாண்டை வீட்டிலிருந்தே கொண்டாடும் நிலை ஏற்பட்டிருக்கிறது – பிரதமர் மோடி உருக்கம்!

ஊரடங்கு உத்தரவால் தமிழ் புத்தாண்டை வீட்டிலிருந்தே கொண்டாடும் நிலை ஏற்பட்டிருக்கிறது என பிரதமர் மோடி கூறியுள்ளார்.

தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் இன்று சித்திரை புத்தாண்டு கொண்டாட்டங்கள் களை இழந்துள்ளன. கோவில்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளதால் அதிகாலையிலேயே பொதுமக்கள் கோவில்களுக்கு சென்று வழிபடும் நடைமுறைகள் தவிர்க்கப்பட்டுள்ளது. தமிழ் புத்தாண்டையொட்டி தமிழக மக்களுக்கு தமிழக முதல்வர் பழனிசாமி, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், இந்திய குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த், மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி உள்ளிட்டோர் தமிழில் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.

பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் உள்ளிட்டோர் வாழ்த்துக்கள் கூறி வருகின்றனர். பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், “என் தமிழ்ச் சகோதரர், சகோதரிகளுக்கு புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். இன்பம் நிறைந்த ஆண்டாக இது அமைந்திடப் பிராத்திக்கிறேன், எதிர்வரும் ஆண்டில் உங்கள் விழைவுகள் யாவும் நிறைவேறிடட்டும்” என்று தமிழில் பதிவிட்டுள்ளார்.

மேலும் கொரோனோவை எதிர்த்து ஒன்றாக இணைந்து போராட நாம் அதிக வலிமையைப் பெறுவோம். நாடு முழுவதும் இன்று கொண்டாடப்படும் விழாக்கள் நம்மிடம் சகோதர உணர்வை வலுப்படுத்தட்டும் என்று குறிப்பிட்டுள்ளார். இதனை தொடர்ந்து நாட்டு மக்களிடையே உரையாற்றிய பிரதமர் மோடி, நாடு முழுவதும் மே 3ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பதாக அறிவித்துள்ளார்.

ஊரடங்கால் நிறைய பண்டிகைகளை கொண்டாட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார். உங்களுடைய ஒத்துழைப்பு நோயை கட்டுப்படுத்த பெரிதும் உதவியிருக்கிறது என நெகிழ்ந்த மோடி, உங்கள் தியாகங்களை நான் பெரிதும் மதிக்கிறேன் என குறிப்பிட்டுள்ளார். மேலும் தமிழ் புத்தாண்டை வீட்டிலிருந்தே கொண்டாடும் நிலை ஏற்பட்டிருக்கிறது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

Categories

Tech |