நளினி, பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலை குறித்து முதலமைச்சர் மு க ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் நளினி, பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்வதற்கு தமிழக அரசு வலியுறுத்தி வந்தது. இவர்கள் 28 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் வாழ்ந்து வருகின்றனர். 7 பேரின் விடுதலை தொடர்பாக தமிழக அரசு மத்திய அரசுக்கு பலமுறை கடிதம் எழுதியுள்ளது. இந்நிலையில் பேரறிவாளன், நளினி உள்ளிட்ட 7 தமிழர்கள் விடுதலை குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார்.
ஆழ்வார்பேட்டையில் முதலமைச்சர் ஸ்டாலின், அமைச்சர் ரகுபதி, தலைமை அரசு வழக்கறிஞர் சண்முகசுந்தரம் ஆகியோர் இந்த ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். விரைவில் தமிழக மக்களுக்கு விடுதலை குறித்து மகிழ்ச்சியான அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் தமிழக அரசு சார்பில் ஏற்கனவே ஏழு பேரை விடுதலை செய்யக்கோரி அமைச்சரவைத் தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு பரிந்துரை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.