கூகுள் செயலியில் இருந்த தவறினை சுட்டிக்காட்டிய தமிழ் மாணவனுக்கு கூகுள் நிறுவனம் பரிசுத்தொகை வழங்கி பாராட்டியுள்ளது.
சென்னை ஆவடி பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீராம் கேசவன். இவர் Appsheet எனப்படும் அப்ளிகேஷனை தயாரிப்பதற்கான செயலியில் வாடிக்கையாளர்களின் தகவல்கள் மற்றும் அவர்களுடைய படைப்புகள் திருடப்படுகிறது என்பது குறித்த தவறை கூகுள் நிறுவனத்திற்கு சுட்டிக்காட்டி அனுப்பியுள்ளார் . அவரின் இந்த சேவையைப் பாராட்டிய கூகுள் நிறுவனம் அவருக்கு இந்திய மதிப்பில் சுமார் ரூ.2,30,000 பரிசு தொகை வழங்கி பாராட்டியுள்ளது.
மேலும் அவருடைய பெயரை கூகுளின் hall of fameல் சேர்த்து மரியாதை அளித்துள்ளது. இதையடுத்து ஸ்ரீராமுக்கு பல்வேறு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. செயலிகள் முதல் தகவல் பரிமாற்ற முறை வரை அனைத்திலும் முக்கிய பங்கு வகிக்கும் பிழைகளை கண்டுபிடித்து அதனை சுட்டிக்காட்டுபவர்களுக்கு கூகுள் நிறுவனம் சன்மானம் அளித்து பாராட்டி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.