துணை அதிபர் பதவிக்குப் போட்டியிடும் கமலா ஹாரிஸ் தேர்தல் மாநாட்டில் தமிழ் வார்த்தை பேசியதை நெட்டிசன்கள் நெகிழ்ச்சியுடன் வைரலாக்கி வருகின்றனர்.
ஜனநாயக கட்சி சார்பில் கமலா ஹரிஸ் அமெரிக்க அதிபர் தேர்தலில் துணை அதிபர் பதவிக்காக போட்டியிடுகிறார். சமீபத்தில் அமெரிக்காவில் நடந்த தேர்தல் மாநாட்டில் பேசியுள்ளார். அந்த உரையில் தனது அம்மாவை குறித்தும் குடும்பத்தினர் குறித்தும் நிகழ்ச்சியாக பேசியுள்ளார். அதில் “இனவெறிக்கு எதிரான பல கட்ட போராட்டங்களுக்கு பின்பு அமெரிக்காவில் கருப்பின மக்களுக்கான சுதந்திரம் கிடைத்தது. நாம் தற்போது அனுபவிக்கும் சுதந்திரத்திற்கு பலரின் போராட்டங்கள் தான் காரணம். இப் போராட்டத்தில் பெண்களின் பங்கும் அதிகம் உண்டு.
பேணி லு ஹேமர், மேரி சர்ச் டெரெல் என பல பெண் போராளிகளின் பெயர்களும் அவர்களின் கதையும் நாம் பேசியிருக்கிறோம். ஆனால் இன்று உலகம் அதிகம் அறியாத ஒரு பெண்ணை பற்றி நான் பேசப் போகிறேன். அவரின் கதை யாருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை அப்பெண்ணின் தோள்களில் தான் நான் வளர்ந்தேன். அந்தப் பெண் என் அம்மா சியாமளா கோபாலன் ஹரிஸ். இந்தியாவில் இருந்து 19 வயதில் அமெரிக்காவிற்கு வந்தார். கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் மேல்படிப்பு மேற்கொள்வதற்காக வந்தவர், என் அப்பா டோனால்ட் ஹரிஸை இங்கு சந்தித்துள்ளார்.
இருவருக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளது. அமெரிக்காவில் 1960ஆம் ஆண்டு தீவிரமாக நடந்த சிவில் டிரைட் முவ்மென்டில் இருவரும் பங்கேற்றனர். என் அம்மாவின் பிஸியான வேலைகளுக்கு இடையே என்னையும், என் சகோதரியையும் கவனித்துக்கொண்டார். அதிகாலையில் எழுந்து பள்ளி செல்வது, பாடங்களை எழுதுவது என அனைத்தையும் கவனித்துக் கொள்வார். மிகவும் தைரியமான பிள்ளைகளாக எங்களிருவரையும் வளர்த்தார். நாங்கள் இருவரும் கறுப்பினப் பெண்கள் என்பதில் பெருமை கொள்கின்றோம். எங்களுக்கு இந்திய பாரம்பரிய கலாச்சாரத்தை கற்றுக் கொடுத்தார்.
குடும்பம் தான் அனைத்தும் என்று சொல்லுவார். அதன்படி எனது பிள்ளைகள், சித்திகள், உறவினர்கள், சகோதரி மாயா ஆகியோர்தான் என் குடும்பம். அவர்களுடைய வார்த்தைகளை எப்பொழுதுமே பொன்மொழிகளாக பின்பற்றுவேன். அதுவே என் முன்னேற்றத்திற்கு காரணம்” என்று தெரிவித்துள்ளார். இதற்கிடையில் அவர் பேசும்போது ‘சித்தி’ என்ற வார்த்தையை பயன்படுத்தினார். அமெரிக்க அரசியலில் முதல் முறையாக ஒரு தமிழ் வார்த்தை உச்சரிக்கப்பட்டுள்ளதாக நெட்டிசன்கள் நெகிழ்ச்சியுடன் இதை வைரலாக்கி வருகின்றனர்.