நாகப்பட்டினம் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த நேற்று முதல் அனைத்து மத வழிபாட்டு தலங்களும் மூடப்பட்டுள்ளது .
கொரோனா வைரஸ் 3-வது அலை பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் நாகை மாவட்டத்தில் வழிபாட்டுத் தலங்கள் மற்றும் கடற்கரை பகுதிகளுக்கு பொதுமக்கள் செல்ல ஏற்கனவே தடை விதிக்கப்பட்டிருந்தது . இந்த நிலையில் தொற்று பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு வாரத்தின் கடைசி 3 நாட்களான வெள்ளி ,சனி , ஞாயிறு ஆகிய நாட்களில் மாவட்டத்திலுள்ள அனைத்தும் மதம் சார்ந்த நிகழ்ச்சிகள் , வழிபாட்டு தளங்களில் பொதுமக்கள் தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.
அதோடு அந்தந்த மதம் சார்ந்த ஆகம விதிகளின்படி கோவில்களில் நடைபெறும் நிகழ்ச்சிகள் அனைத்தும் கோவில் பணியாளர்கள் மூலமாக நடைபெறுவதற்கு தடை இல்லை என மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி நாகை மாவட்டத்தில் பிரசித்திபெற்ற வழிபாட்டுத் தலங்களான நெல்லுக்கடை மாரியம்மன் கோவில், நாகூர் தர்கா, வேளாங்கண்ணி மாதா பேராலயம் உட்பட அனைத்து மத வழிபாட்டு தலங்களும் நேற்றுமுதல் மூடப்பட்டுள்ளன. இதனால் சுவாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் கோவிலுக்கு வெளியே நின்று தரிசனம் செய்தனர்.