தமிழகத்தில் மாணவ-மாணவிகள் தங்கள் கல்லூரி படிப்பை தொடர்வதற்கு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதிலும் குறிப்பாக கல்லூரி படிப்பை தொடர முடியாதவர்களுக்கு தேவையான கல்வி உதவி தொகையை பாரத பிரதம மந்திரியின் கல்வி உதவி திட்டம் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் விண்ணப்பிக்க 2021-2022 ஆம் கல்வியாண்டில் 12 ஆம் வகுப்பில் அல்லது இளங்கலை பட்டப்படிப்பில் கட்டாயமாக 60% மதிப்பெண்களுக்கு மேல் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
மேலும் முதலாம் ஆண்டு பொறியியல், மருத்துவம், கால்நடை மருத்துவம், பி.டெக், பி.எஸ்.சி. நர்சிங், பி.எஸ்.சி. விவசாயம், பி.எட் படிப்பு மற்றும் எம்.பி.ஏ., எம்.சி.ஏ., சட்டம் மற்றும் தொழிற்கல்விகள் பயிலும் மாணவர்களும் இந்த திட்டத்திற்கு விண்ணப்பம் செய்யலாம். இந்த திட்டம் தற்போது முன்னாள் படைவீரரின் மகளுக்கு 36,000 ரூபாய் கல்வி உதவித்தொகையும், மகனுக்கு 30,000 ரூபாய் கல்வி உதவித்தொகையும் வழங்கப்படுகிறது. அதுமட்டுமின்றி இத்திட்டத்தில் விண்ணப்பிக்க வருகிற 31-ஆம் தேதி வரை கால அவகாசத்தை நீட்டித்துள்ளது.
இதனை ” http://www.ksb.gov.in/” என்ற இணையதளம் மூலமாக விண்ணப்பத்தை பூர்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும். இவ்வாறு கால அவகாசத்தை நீட்டித்து இருப்பதால் தர்மபுரியை சேர்ந்த மாணவ- மாணவியர்கள் இதனை பயன்படுத்திக் கொண்டு விண்ணப்பிக்க வேண்டும் என்று அந்த மாவட்ட ஆட்சியர் திவ்யதர்ஷினி அவர்கள் அறிவித்துள்ளார். இதற்கு பதிவு செய்த விண்ணப்பத்தினை தர்மபுரி மாவட்ட முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.