செங்கல்பட்டில் அடுத்தடுத்து 2 பேர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய இருவர் என்கவுண்ட்டர் செய்யப்பட்டுள்ளதாக அதிர்ச்சியான தகவல் வெளியாகியுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் பழைய பேருந்து நிலையம் எதிரேயுள்ள காவல் நிலையம் அருகில் அப்பு கார்த்திக் என்பவர் இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார். அப்போது மர்மநபர்கள் அவர் மீது பெட்ரோல் குண்டு வீசியும், அரிவாளால் வெட்டியும் கொடூரமாக கொலை செய்தனர். மேலும் மேட்டுத்தெருவில் வசித்து வந்த மகேஷ் என்பவரது வீட்டிற்குள் நுழைந்த மர்மநபர்கள், அவரையும் வெட்டிப் படுகொலை செய்து விட்டு தப்பி சென்றுள்ளனர்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறை கண்காணிப்பாளர் மற்றும் காவல்துறை துணை கண்காணிப்பாளர் அங்கு இருந்த சிசிடிவி கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு மேற்கொண்டனர். இதனிடையில் இருவர் அடுத்தடுத்து கொலை செய்யப்பட்ட சம்பவமானது பொதுமக்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொலை வழக்கு தொடர்பாக உத்திரமேரூர் திருப்புலிவனம் பகுதியில் பதுங்கி இருந்த மாதவன், மொய்தீன், தினேஷ், ஜெசிகா உள்ளிட்ட 4 பேரை காவல்துறையினர் கைது செய்ததாக தகவல் வெளியாகியது. இந்நிலையில் கைது செய்யப்பட்டவர்களில் தினேஷ், மொய்தீன் என்கவுன்ட்டர் செய்யப்பட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.