Categories
மாநில செய்திகள்

இங்கிலாந்தின் சுகாதாரத்துறையோடு தமிழ்நாடு அரசு புதிய ஒப்பந்தம்..!!

இங்கிலாந்து நாட்டின் சுகாதாரத்துறையோடு புதிய ஒப்பந்தமொன்றில் கையெழுத்திட்டுள்ளதாக தமிழ்நாடு அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

வெளிநாடுகளில் உள்ள வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியிடுதல், வேலைவாய்ப்புள்ள வெளிநாடுகளுக்கு தகுதியுள்ளவர்களை அனுப்புதல், வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகாம் நடத்துதல் ஆகிய பணிகளை தமிழ்நாடு அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் செய்துவருகிறது.

இந்நிலையில், அந்நிறுவனம் தமிழ்நாடு சுகாதாரத்துறை மூலமாக இங்கிலாந்து நாட்டு சுகாதாரத் துறைக்கு தமிழக மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் போன்ற சுகாதாரப் பணியாளர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையில் ஒரு கருத்துருவை அனுப்பியது.

அதன்படி, கடந்த அக்டோபர் மாதம் இங்கிலாந்து நாட்டில் தமிழக மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு வேலைவாய்ப்பளிக்க முடிவு செய்து இங்கிலாந்து சுகாதாரத்துறை இசைவை அளித்தது. அதற்கான ஒப்பந்தத்தை இருநாட்டு சுகாதாரத்துறைகளும் இணைந்து நேற்று கையெழுத்திட்டனர்.

Tamilnadu Government signs new agreement with UK health department

இந்த ஒப்பந்தத்தின் மூலமாக இங்கிலாந்து நாட்டுக்கு மூன்று ஆண்டுகளுக்கு தமிழக செவிலியர்களை வேலைக்கு அனுப்ப முடியுமென அறிய முடிகிறது.

இதுகுறித்து அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் தர்மேந்திர பிரதாப் யாதவ் தெரிவிக்கையில், ’இங்கிலாந்து நாட்டிற்கு அதிக அளவில் செவிலியர்கள் தேவைப்படுகிறார்கள். இந்த ஒப்பந்தத்தின் மூலம் செவிலியர்கள் இங்கிலாந்து நாட்டுக்கு சென்று நல்ல ஊதியமும், பயிற்சியும் பெறமுடியும்.

ஆண்டுக்கு குறைந்தது 500 செவிலியர்களையாவது இங்கிலாந்து நாட்டுக்கு அனுப்பும் முடிவில் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் உள்ளது. அவர்கள் பனிக்காலம் முடிந்து தமிழகம் திரும்பி வரும்போது இங்கு சுகாதாரத்துறையில் நல்ல இடத்தில் வேலைவாய்ப்பும் பெற முடியும். இந்த ஒப்பந்தத்தின் அடைப்படையில் மருத்துவர்களையும் அங்கு பணிகளுக்கு அனுப்ப உள்ளோம்’ என்றார்.

அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் சார்பில் செவிலியர்களுக்கு இலவசமாக சென்னையில் உள்ள பிரிட்டிஷ் கவுன்சில் மூலம் ஆங்கில மொழி பயிற்சி (IELTS) அளிக்கவும் இந்த ஒப்பந்தத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

Categories

Tech |