சாத்தன்குளத்தில் குற்றச்செயல் புரிந்த போலீசுக்கு தமிழக அரசு துணை போகக்கூடாது என மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.
வியாபாரிகள் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறிய பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், காவல்துறை மீது கொலை வழக்குப்பதிவு செய்து சிறைத்தண்டனை பெற்றுத் தர வேண்டும் என வேண்டுகோள் வைத்துள்ளார். உடனடியாக நடவடிக்கை எடுக்காவிட்டால் அனைவரும் போராட்டம் நடத்துவதற்கு வழிவகுத்துவிடும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கடந்த 20ம் தேதி ஊரடங்கு விதிமுறைகளை மீறி அதிக நேரம் கடைகளை திறந்திருந்ததாக கூறி ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகியோரை கைது செய்துள்ளனர். இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து கோவில்பட்டி சிறைச்சாலையில் அடைத்தனர். இந்த நிலையில் 22ம் தேதி இரவு தமக்கு அதிகமாக வியர்வை வருவதாக பென்னிக்ஸ் தெரிவித்தார். இதையடுத்து சிறைச்சாலைக்கு பின்புறம் உள்ள அரசு மருத்துவமனையில் பென்னிக்ஸ்-ஐ சேர்ந்துள்ளனர்.
ஆனால் பென்னிக்ஸ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். அதனை தொடர்ந்து, அவரது தந்தை 23ம் தேதி காலை ஜெயராஜும் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் இரண்டு எஸ்.ஐ.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். மேலும், இது தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தொடரப்பட்ட வழக்கில் தந்தை, மகன் இருவரின் உடலையும் 3 மருத்துவர்களைக் கொண்ட குழு முன்னிலையில் பிரேத பரிசோதனை செய்ய உத்தரவிட்டது.
மேலும், கோவில்பட்டி மாஜிஸ்திரேட் பாரதிதாசன் சம்பவம் நடந்தது தொடர்பாக நேரில் சென்று விசாரணை நடத்தி வருகிறார். இந்த நிலையில், சிறைச்சாலையில் இருவர் உயிரிழந்தது குறித்து சிபிஐ- விசாரணைக்கு மாற்ற வேண்டும் என தமிழக அரசு சார்பில் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இதனை விசாரித்த நீதிபதிகள், மாநில அரசு முடிவெடுக்கும் பட்சத்தில் நீதிமன்றம் அதில் தலையிடாது என கருத்து தெரிவித்துள்ளனர். மேலும், சாத்தான்குளம் காவல்நிலையத்தை தூத்துக்குடி ஆட்சியர் கட்டுபாட்டில் கொண்டுவர வேண்டும் என்றும், வருவாய்த்துறை அதிகாரியை சாத்தான் குளம் காவல் நிலையத்திற்கு பொறுப்பாக நியமிக்க கோரியும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். இதையடுத்து வழக்கு விசாரணை 2 வாரத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.