வெளிநாட்டில் தவிப்போரை தாயகம் அழைத்து வரும் விமானத்திற்கு தமிழக அரசு அனுமதிக்கவில்லை என மத்திய அரசு குற்றம் சாட்டியுள்ளது.
கொரோனா பாதிப்பு தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவானது கடந்த மார்ச் 23ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டது. இந்நிலையில், பேருந்து, ரயில், விமானம் உள்ளிட்ட போக்குவரத்து சேவைகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டது. இதனால் தங்களது சொந்த ஊர்களை விட்டு வெளி மாநிலம், மாவட்டம், வெளிநாடுகளுக்கு பிழைப்பிற்காக வேலைக்குச் சென்றவர்கள் அங்கே மாட்டிக் கொண்டார்கள். அவர்கள் தற்போது கொஞ்சம் கொஞ்சமாக தங்களது சொந்த ஊரை நோக்கி சென்றுகொண்டிருக்கிறார்கள்.
வெளிநாட்டிலும் கொரோனா பாதிப்பால் பல நாடுகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளதால், அங்கு உள்ள தமிழர்களும் வேலை வாய்ப்பு இல்லாமல் தவித்து வருகின்றனர். எனவே அவர்களும் தங்களது தாயகம் திரும்புவதற்கு முயற்சி செய்து கொண்டிருக்கக் கூடிய சூழ்நிலையில், வெளிநாடுகளில் சிக்கி தவிக்கும் இந்தியர்களை தாயகம் அழைத்து வர விமான சேவைகளை இந்திய அரசு இயக்கியுள்ளது. ஆனால் அந்த விமான சேவை தமிழகத்தில் இயக்கப்படவில்லை என குற்றச்சாட்டு எழுந்ததை தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
பின் நீதிமன்றம் மத்திய அரசிடம் இதுகுறித்து பதில் அளிக்க உத்தரவிட, தமிழக அரசு விமான சேவையை இயக்க அனுமதிக்கவில்லை என்று குற்றச்சாட்டை முன்வைத்தது. இதற்கு பதிலளித்த தமிழக அரசு வந்தே பாரத் திட்ட விமானத்திற்கு அனுமதி உள்ளதாகவும், அதன் மூலம் தமிழர்கள் தமிழகத்திற்குள் நுழைய அனுமதி உண்டு எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இந்த வழக்கு குறித்த தீர்ப்பானது செவ்வாய்க்கிழமைக்கு ஒத்தி வைத்து நீதிமன்றம் உத்தரவிட்டது.