தமிழ்நாடு முழுவதும் 385 பகுதிகள் தடைசெய்யப்பட்ட இடங்களாக அறிவிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
சென்னையில் மட்டும் 112 பகுதிகள் தனிமைப் படுத்தப் பட்டுள்ளன. தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் மட்டும் 76 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு, கொரோனோவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1596 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்தும் விதமாக தமிழகம் முழுவதும் தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. 15 மாநகராட்சிகள், 121 நகராட்சிகள், 528 பேரூராட்சிகளில் மற்றும் பஞ்சாயத்து அமைப்புகள் மூலம் 789 கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த கட்டுப்பட்டு அறைகள் மூலம் ஏறத்தாழ மூன்று லட்சத்திற்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் தமிழகம் முழுவதும் கொரோனா பரவியுள்ள பகுதிகளில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். கொரோனா பாதித்த நபர்கள் இருக்கும் தெருக்களுக்குள் மற்றவர்கள் நடமாடுவதை கண்காணிக்கும் வகையில் தடுப்புகள் அமைத்து கண்காணிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தமிழ்நாடு முழுவதும் 385 பகுதிகள் கொரோனா தொற்று பரவக்கூடிய இடங்களாக அடையாளம் காணப்பட்டு அவை தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த இடங்கள் தீவிர கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளன. இந்த பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் கிடைக்க அப்பகுதியில் உள்ள நகராட்சி மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் மூலம் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. 24 மணி நேர காவல்துறை கண்காணிப்பு உள்ளது. சென்னை பெருநகரை பொருத்த அளவில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 358 ஆக உயர்ந்துள்ளது.
நேற்று ஒரே நாளில் 55 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இவர்களில் 4 பேர் 9 வயதுக்குட்பட்ட சிறுவர்கள், 24 பேர் 10 முதல் 19 வயதுக்கு உட்பட்டவர்கள், 79 பேர் 30 முதல் 35 வயது உட்பட்டவர்கள், 7 பேர் 80 வயதை கடந்தவர்கள். சென்னையில் கொரோனா பாதிப்புக்குள்ளான 358 பேர் வசித்த 112 பகுதிகள் பட்டுள்ளன. சென்னையில் மொத்தம் உள்ள 15 மண்டலங்களில் ராயபுரம் தான் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது.
தண்டையார்பேட்டை மண்டலத்தில் 46 பேரும், தேனாம்பேட்டை, திருவேற்காடு மண்டலங்களில் 42 பேரும், கோடம்பாக்கம் மண்டலத்தில் 35 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். அம்பத்தூர், மணலி ஆகிய இரு மண்டலங்களும் பாதிப்புக்கு உட்படாமல் இருந்து வந்த நிலையில் அம்பத்தூர் மண்டலத்தில் நேற்று ஒருவருக்கும் வைரஸ் தொற்று பரவி இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால் அம்பத்தூர் மண்டலமும் அபாயம் வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. மணலி மண்டலத்தில் மட்டும் யாருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்படவில்லை