பாராளுமன்ற தேர்தலையொட்டி தமிழகத்தில் இதுவரை உரிய ஆவணங்களின்றி எடுத்து செல்லப்பட்ட 183 கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே, தமிழ்நாட்டில் தான் பணமும், தங்கமும் அதிகளவு சிக்கியுள்ளது என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தேர்தல் நாள் அறிவித்தது முதல் இன்றுவரை, நாடு முழுவதும் பறிமுதல் செய்யப்பட்ட, பணம், தங்கம், மதுபானம், போதைப் பொருட்கள் உள்ளிட்டவற்றின் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
அதில் தமிழகத்தில் இதுவரை, சுமார் 183 கோடியே 21 லட்சம் ரூபாய் பணமும், 284 கோடியே 67 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, 1602 கிலோ தங்கம் மற்றும் வெள்ளியும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து ஆந்திராவில் 137 கோடியே 7 லட்சம் ரூபாய் பணமும், மகாராஷ்டிராவில் 39 கோடி ரூபாய் பணமும் சிக்கியுள்ளது , இதுவரை நாடு முழுவதும், 504 கோடி ரூபாய் மதிப்புள்ள பணம் மற்றும் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் பறிமுதல் செய்யப்பட்டதன் மொத்த மதிப்பு சுமார் 467 கோடியே 88 லட்சம் என்பது குறிப்பிடத்தக்கது.