தாமிரபரணி ஆற்று கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளதால், பேரிடர் மீட்பு குழுவினர் அங்கு வந்துள்ளனர்.
நெல்லை தென்காசி தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் வளிமண்டலத்தில் நிலவும் மேலடுக்கு சுழற்சி காரணமாக கடந்த 3 நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. பாபநாசம் மணிமுத்தாறு அணைகளில் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து உள்ளது. ஏற்கனவே இரண்டு அணைகள் முழு கொள்ளளவை எட்டியுள்ள நிலையில், அணைகளுக்கு வரும் நீர் தாமிரபரணி ஆற்றில் திறந்து விடப்படுகிறது.
நேற்று அதிகாலையில் அணைக்கு 3 ஆயிரத்து 561 கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருந்த நிலையில் நேற்றும் கனமழை பெய்ததால் மதிய நேரத்தில் தண்ணீர் வெளியேற்றப்பட்ட அளவு வினாடிக்கு 18 ஆயிரம் கனஅடியாக அதிகரித்ததது.பிரதான அணையான பாபநாசம் அணையில் காலை நேரத்தில் 6 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டது. மேலும் மழை பெய்ததால் கூடுதலாக 4 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது. இரு அணைகளிலும் சேர்த்து வினாடிக்கு 28 ஆயிரம் கன அடி தண்ணீர் தாமிரபரணி ஆற்றில் திறந்துவிடப்பட்டது.
இதனால் அங்கே வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.விக்ரமசிங்கபுரம் அம்பை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் விடிய விடிய மழை பெய்ததால் வெள்ளம் தாமிரபரணி ஆற்றில் வினாடிக்கு சுமார் 30 ஆயிரம் கன அடி நீர் செல்கிறது இதனால் ஆற்றில் யாரும் குளிக்க வேண்டாம் என பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ள நிலையில் அரக்கோணத்தில் இருந்து தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் நேற்று மாலையில் திருநெல்வேலி வந்தனர் வெள்ளத்தால் பாதிக்கப்படும் பல்வேறு பகுதிகளுக்கு அவர்கள் பிரித்து அனுப்பி வைக்கப்படுகிறார்கள்.