தமிழகத்தில் வருகிற 2024-ம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்தில் பாஜக தீவிர களப்பணி ஆட்சி வருகிறது. சமீபத்தில் தமிழகம் வந்த அமித்ஷா திமுகவில் குடும்ப அரசியல் நடைபெற்றுக் கொண்டிருப்பதாலும், அதிமுக வலுவிழந்து விட்டதாலும் தற்போது தமிழக அரசியலில் வெற்றிடம் ஏற்பட்டுள்ளது. இந்த தருணத்தை சரியாக பயன்படுத்திக் கொண்டு அந்த இடத்தை நாம் நிரப்ப வேண்டும் என்று நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கினார். அதன் பிறகு தமிழக மக்கள் மத்தியில் பிரதமர் மோடி மீது நல்ல அபிப்பிராயம் இருப்பதாகவும், மத்திய அரசின் திட்டங்கள் தமிழக மக்களுக்கு நல்ல பலனை கொடுப்பதாகவும் அமித்ஷா கூறியுள்ளார். அதன் பிறகு தற்போது குஜராத் மற்றும் இமாச்சல் பிரதேசத்தில் தேர்தல் நடைபெற்று வருவதால் பாஜக அங்கு முழு கவனம் செலுத்தி வருகிறது.
தேர்தல் முடிவடைந்த பிறகு அமித்ஷா மற்றும் பிரதமர் மோடியின் முழு கவனமும் தமிழகம் மீது திரும்பும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் வருகிற 2024-ம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற பாஜக 2 முக்கிய யுக்திகளை வைத்திருப்பதாக கூறப்படுகிறது. அதாவது முதலில் 10 மக்களவைத் தொகுதிகளில் வெற்றி பெற வேண்டுமாம். குறிப்பாக நீலகிரி, குமரி, நெல்லை, சிவகங்கை, வேலூர், ராமநாதபுரம், கோவை மற்றும் சென்னை தெற்கு போன்ற 10 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்று பாஜக முனைப்புடன் செயல்படுவதாக கூறப்படுகிறது. இந்த வெற்றியை மனதில் வைத்துக் கொண்டே மத்திய அமைச்சர்கள் மற்றும் பாஜகவின் தேசிய தலைவர்களின் வருகை தமிழகத்தில் அதிகரிப்பதாக கூறப்படுகிறது.
தமிழகத்தில் எல். முருகன் மாநில தலைவராக இருந்தபோது வேல் யாத்திரையை கையில் எடுத்த போது அது சலசலப்பை ஏற்படுத்தினாலும் மக்கள் மத்தியில் பேசுபொருளாக மாறியது. இந்நிலையில் அண்ணாமலை இல்லம் செல்வோம் உள்ளம் வெல்வோம் என்ற திட்டத்தை தற்போது சென்னையில் தொடங்கி வைத்துள்ளார். இந்த திட்டத்தின்படி ஒவ்வொரு மாதமும் 24 லட்சம் வீடுகளுக்கு பாஜகவினர் சென்று மக்கள் ஆதரவை பெற முடிவு செய்துள்ளனர். மேலும் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை பாஜக ஆட்சி அமைய வேண்டும் என அமித்ஷா கூறியதற்கு ஏற்ப அண்ணாமலை தீவிரக் களப்பணி ஆற்ற வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.