மணல் கொள்ளையர்களிடம் சட்ட விரோதமாக விற்கப்படும் விவசாய நிலத்தின் பட்டா ரத்து செய்யப்படும் என தாசில்தார் எச்சரிக்கை செய்துள்ளார்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள உதயேந்திரம் உள்பட மூன்று பகுதிகளில் பட்டா இடத்தில் மணலை எடுத்து விற்கப்பட்டு வருவதாக தொடர்ந்து புகார் வந்துள்ளது. அந்தப் புகாரின் பேரில் தாசில்தார் மோகன் பல பகுதிகளுக்கு நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். அப்போது கச்சேரி சாலையில் பாலாற்றின் அருகாமையில் இருக்கக் கூடிய நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து பல வருடங்களாக வைத்திருக்கும் நபர்கள் மணல் கொள்ளையர்களுக்கு அந்த இடத்தை மணலை எடுப்பதற்காக பல லட்சத்திற்கு விற்பனை செய்தது அவருக்கு தெரியவந்துள்ளது.
அவ்வாறு விற்கப்பட்ட இடங்களில் மணல் கொள்ளையர்கள் மணல் குவாரி அமைத்து டிப்பர் லாரிக்கு 20 ஆயிரம் ரூபாய் மற்றும் டிராக்டருக்கு 8,000 ரூபாய் என மணல் விற்பனை செய்து வந்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து தாசில்தார் மோகன் அந்த இடத்தை ஆய்வு செய்து இது போன்ற சட்ட விரோதமான மணல் கடத்தும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், பட்டா நிலங்களில் மணல் கொள்ளையர்களிடம் விற்கப்படும் விவசாய நிலத்தின் பட்டா ரத்து செய்யப்படும் என எச்சரிக்கை செய்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து மணல் கொள்ளையர்களுக்கு வாகனங்கள் செல்ல பாதைக்காக இடம் கொடுத்தாலும் நிலங்களின் பட்டா ரத்து செய்யப்படும் என தாசில்தார் தெரிவித்துள்ளார். மேலும் இது தொடர்பாக சம்பந்தப்பட்ட வருவாய் ஆய்வாளர்கள் உரிய நடவடிக்கை எடுக்க தாசில்தார் மோகன் உத்தரவிட்டுள்ளார்.