டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பிலான மது பாட்டில்களை திருடி சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.
திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள சொரகொளத்தூர் பகுதியில் டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது. அந்த கடையில் அப்பகுதியில் வசிக்கும் சிவராமகிருஷ்ணன் என்பவர் மேற்பார்வையாளராகவும், 3 பேர் விற்பனையாளராகவும் வேலை பார்த்து வருகின்றனர். இந்நிலையில் ஊழியர்கள் வழக்கம்போல் கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்று விட்டனர். இதனையடுத்து மறுநாள் காலையில் சிவராமகிருஷ்ணனுக்கு கடையின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.
அந்த தகவலின் படி கடைக்கு சென்று சிவராமகிருஷ்ணன் பார்த்த போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு அங்கு 16 அட்டை பெட்டிகளில் வைக்கப்பட்டிருந்த ரூ.1 லட்சத்து 56 ஆயிரத்து 550 மதிப்பிலான மது பாட்டில்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்துள்ளது. இதுகுறித்து சிவராமகிருஷ்ணன் கலசபாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் மதுபாட்டில்களை திருடிச் சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.